நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கரூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூரில் துடைக்க முடியாத பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது. எதிர்பாராத ஒரு விபத்து. யாரையும் குறை சொல்லி பயனில்லை. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் இறப்பை எல்லாம் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. இது நம் எல்லோருக்கும் ஒரு படிப்பினை. பெருந்துயரங்கள் நிகழாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
பிள்ளைகளை இழந்துள்ள குடும்பத்தினர் எல்லோருக்கும் எனது ஆறுதல். உலகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இழந்தவர்கள் இந்த துயரத்தில் இருந்து கடந்து வரவேண்டும். குறிப்பாக தமிழக வெற்றிக் கழக பிள்ளைகள், கட்சியின் முதன்மை பொறுப்பாளர்கள் மற்றும் என் தம்பி விஜய்க்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பு குறைபாடு காரணமில்லை. வரும் காலங்களில் இது போன்ற பேரிடர் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது அனைவரின் பொறுப்பு. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.