உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே CISF-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே: திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் அரசு தரப்பு வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு விசாரணை தொடங்கியது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாம்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில் கார்த்திகை தீபத்தன்று வழக்கத்திற்கு மாறாக மலைஉச்சியில் தர்கா அருகில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணை செய்து 3 நாட்களுக்கு முன்பாக தீர்ப்பு வழங்கினார். அதில், வழக்கமாக ஏற்ற கூடிய மோட்ச்ச தீபம் என்று சொல்லக்கூடிய இடத்தில் மட்டுமல்லாமல் வரும்காலங்களில் தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த உத்தரவை நடைமுறைபடுத்தவில்லை என நேற்று காலையிலேயே ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு முறையீடு செய்யப்பட்டது.
இதனை ஏற்ற்கொண்ட நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யுங்கள். இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துகொள்வதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை கோயிலில் தீபம் ஏற்றுவதற்கு முன்பாகவே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளபட்டது. தொடர்ந்து நேற்று இரவு வரை இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
அப்போது தனிநீதிபதியின் உத்தரவை அரசு முறையாக அமல்படுத்தவில்லை. எனவே உயர்நிதிமன்ற மதுரை கிளையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்பில் இந்த தீபத்தை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
இந்தநிலையில், தமிழக அரசு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள தலைமை நீதிபதி முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டது. நிர்வாக நீதிபதி ஜெய்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணம் அமர்வில் முறையீடு செய்ய வலியுறுத்தினார். அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான் உள்ளிட்டோர் முறையீடு செய்தனர். இந்த வழக்கு இன்று காலை விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது அரசு தரப்பு வாதம்:
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற நீதிபதி ஜி.ஆர் .சுவாமிநாதன் அனுமதி வழங்கியுள்ளார். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர், மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது.
உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே CISF-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே, அதைத்தாண்டி மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

