அசல் அரசியலமைப்பில் இல்லாத ‘மதச்சார்பற்ற’, ‘சோசலிஸ்ட்’ வார்த்தைகளை நீக்க மசோதா: மாநிலங்களவையில் பாஜ எம்பி தாக்கல்
புதுடெல்லி: அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து ‘மதச்சார்பற்ற’, ‘சோசலிஸ்ட்’ ஆகிய 2 வார்த்தைகள் தேவையில்லை என்பதால் அவற்றை நீக்கக் கோரி பாஜ எம்பி பீம் சிங் மாநிலங்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பாஜ எம்பி பீம் சிங் அரசியலமைப்பு திருத்த மசோதா, 2025 (அரசியலமைப்பு முகப்புரை திருத்தம்) எனும் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். பின்னர அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்பு முகப்புரையில் இருக்கும் மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் என்ற வார்த்தைகள் குழப்பத்தை உருவாக்குகின்றன. கடந்த 1949ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950 முதல் நடைமுறையில் உள்ள அசல் அரசியலமைப்பில் இந்த 2 வார்த்தைகளும் இல்லை. 1976ம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில், 42வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி இந்த 2 வார்த்தைகளையும் அரசியலமைப்பில் சேர்த்தார். அந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் இருந்தனர்.
அரசியலமைப்பு சபையும் இந்த பிரச்னையை ஏற்கனகவே விவாதித்துள்ளது. அப்போது வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கர், இந்திய அரசிலயமைப்பின் அமைப்பு நாட்டை மதச்சார்பற்றதாக மாற்றும் வகையில் இருப்பதால் அந்த வார்த்தையை சேர்ப்பது தேவையில்லை என்றார். மேலும், சோசலிஸ்ட் வார்த்தையை சேர்ப்பதையும் அம்பேத்கர் விரும்பவில்லை. அப்போதைய சோவியத் ஒன்றியத்தை மகிழ்ச்சிப்படுத்த சோசலிஸ்ட் சொல் சேர்க்கப்பட்டது. மேலும் முஸ்லிம்களை திருப்திபடுத்த மதச்சார்பற்ற சொல் சேர்க்கப்பட்டது. எனனே இந்த 2 வார்த்தைகளை நீக்க வேண்டும். அது எந்த அடிப்படை உரிமைகளையும், அரசியலமைப்பின் பிற விதிகளையும் பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
* மனைவி விருப்பமின்றி உறவு கொண்டால் குற்றம் புதிய சட்டம் கேட்டு தனிநபர் மசோதா தாக்கல் செய்த எம்பி சசிதரூர்
இந்தியாவில் தற்போது அமலில் உள்ள பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் கணவன் விருப்பமின்றி உறவு கொள்வது பாலியல் பலாத்காரக் குற்றமாகக் கருதப்படுவதில்லை. இந்தச் சட்டப் பிரிவில் திருத்தம் மேற்கொண்டு மனைவியின் விருப்பமின்றி நடக்கும் பாலியல் உறவையும் குற்றமாக்கக் கோரி காங்கிரஸ் மூத்த எம்பி சசிதரூர் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார்.


