ரகசியமாக இயங்கி வந்தது குஜராத்தில் மருந்து தொழிற்சாலையில் ரூ.22 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 4 பேர் கைது
அகமதாபாத்: குஜராத்தில் இயங்கி வந்த மருந்து தொழில்சாலையில் ரூ.22 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் சைக்கோட்ரோபிக் என்ற மருந்து தயாரிக்கும் தொழில்சாலை இயங்கி வருகிறது. இங்கு சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக வருவாய் புலகாய்வு இயக்குநரகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று அந்த தொழில்சாலையில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அல்பிரசோலம் என்ற போதைப்பொருள் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.22 கோடி மதிப்பிலான அல்பிரசோலம் போதைப்பொருள்களை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “அல்பிரசோலம் என்பது இந்தியாவில் உரிய மருந்து சீட்டு இல்லாமல் கடைகளில் விற்க கூடாது. அதன் உற்பத்தி, விற்பனை, அதை வைத்திருப்பது உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதை முறையான ஆவணங்களின்றி வைத்திருப்பதும், மருத்துவ உரிமம் இன்றி வைத்திருப்பது குற்றமாகும்” என்றனர்.
