காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7ம் தேதி இந்திய ராணுவம் `ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. 3 நாட்கள் நடந்த மோதல் திடீரென முடிவுக்கு வந்தது. முதன்முதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சண்டை நிறுத்தத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது அவர், வர்த்தகத்தை மையமாக வைத்து நிறுத்தியதாக கூறினார். இதுபோன்று இதுவரை 26 முறை அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கேட்டுக்கொண்டதால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக இந்தியா தெரிவித்தது. சண்டை நிறுத்தம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து டாலர் மில்லியன் கேள்விகள் ஒவ்வொரு இந்திய குடிமகன் மனதிலும் எழுந்துள்ளது. இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரங்கள் குறித்து நேற்று முதல் விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, இரு அவைகளிலும் தலா 16 மணிநேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் மதியம் 12 மணிக்கு விவாதத்தை ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார். எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பேசி முடித்தவுடன் இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசுகிறார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி, சண்டை நிறுத்தம் குறித்து விளக்கம் அளிப்பார் என தெரிகிறது.
அப்போது தான் முழுமையான உண்மை விவரம் நாட்டு மக்களுக்கு தெரியவரும். ஆனால், வழக்கம்போல் மோடி, இறுதி கட்ட விவாதத்தில் கலந்துகொள்ளாமல் சென்று விடுவாரா என்பது குறித்து தெரியவில்லை. அவர் கலந்துகொண்டு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை நடத்தி
உள்ளன. விவாதம் தொடங்குவதற்கு முன்பு ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட பதிவில் நாடாளுமன்ற விவாதத்தின்போது இந்தியாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலோ அல்லது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையும் வகையிலோ பேசக்கூடாது.
இந்திய ராணுவத்தின் கண்ணியத்தையும் அதன் தியாக உணர்வையும் மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ராணுவத்தின் தியாகத்தை ஒவ்வொரு இந்தியனும் மதிக்கின்றான். நாடு என்றாலே தேசமே ஒரே அணியில் திரள்கிறது. அந்நிய நாடு தலையீட்டால் போர் நிறுத்தம் ஏற்பட்டதா, 26 பேரை கொன்ற தீவிரவாதிகளை என்ன செய்தோம் என்பது குறித்தான `சிதம்பர ரகசியத்தை’ அவையில் கூறி நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.