Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடர்ந்து கூட்டணி அமைச்சரவை கேட்பதால் விரக்தி; பாஜகவை கழட்டிவிட ரகசிய திட்டம்?.. விஜயை கூட்டணிக்கு இழுக்க எடப்பாடி பேரம்

சென்னை: தொடர்ந்து கூட்டணி அமைச்சரவை கேட்பதால் விரக்தியில், தேர்தல் நேரத்தில் பாஜகவை கழட்டிவிட்டு விட்டு தவெகவுடன் கூட்டணி அமைக்க ரகசிய பேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் நெருக்கம் காட்டினார். இதனால் அவரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்தார் சசிகலா. பின்னர் அவர் சிறை சென்றார். அப்போது பாஜகவுடன் எடப்பாடி பழனிச்சாமியும் நெருக்கம் காட்டினார். பின்னர் கூட்டணி சேர்ந்தார். சட்டப்பேரவை தேர்தலில் இந்தக் கூட்டணி படுதோல்வியை சந்தித்து, ஆட்சியை இழந்தது.

இந்த தோல்விக்கு பாஜகவினர்தான் காரணம் என்று அதிமுகவினர் குற்றம்சாட்டினர். மக்களவை தேர்தல் நேரத்தில் பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறி தனித்து அணி அமைத்து போட்டியிட்டது. பாஜகவும் 21 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்த தேர்தலில் இரு அணிகளுமே தோல்வியை தழுவின. இந்தநிலையில், கூட்டணியில் கண்டிப்பாக சேர்ந்தே ஆக வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடியை டெல்லிக்கு அழைத்து கேட்டுக் கொண்டார். அதோடு எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் சோதனைகளை நடத்தியது. அதில் பல நூறு கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில், எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்ற பிறகு கூட்டணியில் சேர்வதாக அறிவித்தார்.

அப்போது முதல் தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும் என்று அமித்ஷா அறிவித்து வருகிறார். தொடர்ந்து 4 முறை இவ்வாறு அறிவித்து விட்டார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, இது அதிமுக கூட்டணி வெற்றி பெற்று அமைச்சரவை அமைக்கும் என்று மட்டுமே தெரிவித்ததாக கூறி வருகிறார். ஆனால் ஒவ்வொரு பேட்டியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். பாஜக அதில் இடம்பெறும் என்று கூறி வருகிறார். அமித்ஷாவின் பேச்சைத் தொடர்ந்து பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைச்சரவை வேண்டும் என்று, கேட்கத் தொடங்கிவிட்டன. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் ஷாக்காகிவிட்டது.

இதனால் பாஜகவால் ஏற்கனவே பல முறை தோற்றுவிட்டோம். தற்போது வழக்குப்போடுவதாக மிரட்டுகின்றனர்.

இதனால் தற்சமயத்துக்கு கூட்டணி என்று அறிவித்துள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் அவர் கண்டிப்பாக அணிமாறுவார் என்றும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணிக்கு வரவேண்டும், சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதாக கூறினார். பாஜக இருக்கும் கூட்டணிக்கு கண்டிப்பாக விசிக, கம்யூனிஸ்ட்டுகள் வரமாட்டார்கள் என்று எடப்பாடிக்கு தெரியும். ஆனால் ஏன் அவர் வெளிப்படையாக அவர்களது பெயரைச் சொல்லி அழைத்தார் என்று பாஜகவினர் திடீர் குழப்பம் அடைந்தனர். அதோடு, விஜய் கடந்த சில நாட்களாக திமுக மற்றும் பாஜகவை மட்டுமே எதிரியாக பார்ப்பதாக கூறியுள்ளார். அதிமுகவைப் பற்றி எங்கும் பேசவில்லை. இதனால், அதிமுக, நடிகர் விஜயின் தவெக கட்சியின் 2ம் கட்ட தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விஜய்க்காக அரசியல் வியூகங்களை வகுக்கும் ஒருவருடன் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதாகவும், இதற்காக பெரும் தொகை பேரமாக பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தேர்தல் நேரத்தில் பாஜகவை கழட்டிவிட்டு விட்டு அதிமுக, தவெக மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணிக்கு அவர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. நேற்று இரவு பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கூட்டணிக்கு முக்கிய கட்சி ஒன்று வரப்போகிறது என்று கூறியுள்ளார். அப்படிப் பார்த்தால் தற்போது கூட்டணி இல்லாமல் இருப்பது சீமானின் நாம் தமிழர், விஜயின் தவெக ஆகிய கட்சிகள் மட்டுமே. சீமான் எப்போதுமே தனித்து போட்டி என்பதில் உறுதியாக உள்ளார். இதனால் விஜயை மனதில் வைத்துதான் அவர் இவ்வாறு பேசிஉள்ளார். அதேநேரத்தில் கம்யூனிஸ்ட், விசிகவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் தேர்தல் நேரத்தில் எப்படியும் பாஜகவை எடப்பாடி கழட்டி விட்டு விடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி அரசியலில் தன்னுடைய வெற்றிக்காக எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடியவர்.

அரசியலில் தன்னை அறிமுகம் செய்த செங்கோட்டையனை காலி செய்து விட்டார். முதல்வராக்கிய சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டார். மெஜாரிட்டி இல்லாதநிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்த்து, துணை முதல்வர் பதவி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கினார். பின்னர் அவரையும் கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டார். தற்போது அதேநிலைதான் பாஜகவுக்கும் ஏற்படும் என்கின்றனர் அதிமுகவினர். தேர்தல் நேரத்தில் கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டால், வழக்குப்போட முடியாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கருதுவதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் நகர்வுகளை பாஜகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால் தமிழக அரசியலில் தற்போது புதிய பரபரப்பு எழுந்துள்ளது.