Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளாவில் 2வதாக சரக்கு கப்பல் எரிந்து விபத்து; தமிழக கடலோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம்

* கன்டெய்னர்களில் ஆபத்தான ரசாயனங்கள்

* பூச்சி மருந்துகள் இருப்பதால் மீனவர்கள் அதிர்ச்சி

நாகர்கோவில்: கேரளாவில் அரபிக்கடலில் எம்எஸ்சி எல்சா 3 கப்பல் கவிழ்ந்ததை தொடர்ந்து மற்றுமொரு கப்பல் நடுக்கடலில் எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் குமரி மாவட்டம் உட்பட தமிழ்நாடு கடலோர பகுதியில் சுற்றுச்சூழல் அபாயம் அதிகரித்துள்ளது. லைபீரியா கொடியுடைய எம்எஸ்சி எல்சா 3 சரக்கு கப்பல் கொச்சி கடற்கரையில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் மே 25ம் தேதி மூழ்கியது. கப்பலில் 640 கன்டெய்னர்கள் இருந்தன. இதில் 13 கன்டெய்னர்களில் ஆபத்தான பொருட்களும், 12 கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்தன. இவற்றில் சுமார் 100 கன்டெய்னர்கள் கடலில் மிதந்து, ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி கடற்கரைகளில் கரை ஒதுங்கின. இவற்றில் பிளாஸ்டிக் துகள்கள், பாலித்தீன், கால்சியம் கார்பைடு உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் இருந்தன.

கேரள அரசு இந்த சம்பவத்தை ‘மாநில பேரிடர்’ என அறிவித்தது. கன்னியாகுமரி கடற்கரையிலும் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் ஆபத்தான பொருட்கள் கரை ஒதுங்கியது. இதனால் கடல் மாசுபாடு மற்றும் மீனவர் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்ட கடற்கரை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியிலும் 5 கி.மீ. தூரம் பிளாஸ்டிக் துகள்கள் கரை ஒதுங்கியுள்ளது. இந்த கப்பல் மூழ்கிய பாதிப்புகள் அடங்குவதற்குள், அரபிக்கடலில் மற்றொரு கப்பல் தீ பிடித்து எரிந்து கன்டெய்னர்கள் கடலில் விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூர் எம்வி வான்கய் 503 என்ற சரக்கு கப்பல் ஜூன் 7ம் தேதி கொழும்பிலிருந்து புறப்பட்டு, மும்பை நோக்கி செல்லும் வழியில், கோழிக்கோடு பேய்பூர் கடற்கரையில் இருந்து 130 கடல் மைல் தொலைவில் நேற்று முன்தினம் கன்டெய்னர் வெடிப்பால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இந்திய கடற்படை, கடலோர காவல் படையினர் இணைந்து 18 பணியாளர்களை மீட்டனர். தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. இந்த தீ விபத்தால் கன்னியாகுமரி கடல் பகுதியில் நேரடியாக பாதிப்பு ஏற்பட்டதற்கான உறுதியான தகவல்கள் இல்லை. இருப்பினும், 100 டன் பங்கர் ஆயில் கப்பலில் உள்ளதால் கடற்கரை பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய கடல்சார் சேவை மையம் அறிவித்துள்ளது. மேலும் கப்பலில் உள்ள கன்டெய்னர்கள் 3 நாளில் கடலில் மிதக்க வாய்ப்பு உள்ளது என்றும், தொடர்ந்து இவை கரை பகுதியை அடைய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எல்சா 3 கப்பலில் உள்ள பொருட்கள் தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் கடற்கரை பகுதி வரை சென்றுள்ள நிலையில் இந்த எம்வி வான்கய் 503 சரக்கு கப்பலில் இருந்தும் பொருட்கள் தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வந்து சேர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

தற்போது வரை 50 கன்டெய்னர்கள் கடலில் விழுந்துள்ளது. இவை கடல் நீரோட்டத்தில் இழுத்துவர வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதே வேளையில் இதனை தடுக்கும் மீட்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரசாயன மாசுபாடு: எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்கு கப்பலில் கால்சியம் கார்பைடு, சல்பர் எரிபொருள் எண்ணெய் போன்ற ஆபத்தான ரசாயனப் பொருட்கள் இருந்தன. இவை கடலில் கலந்து, கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்டிக் மற்றும் கழிவு மாசு: மூழ்கிய கப்பல்களில் இருந்து வெளியேறிய பிளாஸ்டிக் துகள்கள், பஞ்சு உள்ளிட்ட கழிவுகள் கன்னியாகுமரி, கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம் ஆகிய கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ளன. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் கடற்புற்கள், மீன்கள் மற்றும் கடற்பசு போன்ற பாலூட்டி உயிரினங்களின் வாழ்விடங்களை அழிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

கடல் உயிரினங்களுக்கு பாதிப்பு: கப்பல்களில் இருந்து கசியும் ரசாயனப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கடல் உயிரினங்களின் உணவுச் சங்கிலியை பாதிக்கின்றன. இது மீன்கள், பவளப்பாறைகள் மற்றும் மிதவை பாசிகளின் உற்பத்தித்திறனை குறைக்கிறது. குறிப்பாக, கன்னியாகுமரியின் வெட்ஜ் படுகைக்கரை பகுதி, அரிய வகை மீன்கள் மற்றும் பவளப்பாறைகளின் உறைவிடமாக உள்ளது, இதற்கு பாதிப்பு ஏற்படலாம்.

மீனவர் வாழ்வாதாரம்: மீன்கள் மற்றும் கடல் வளங்களின் குறைவு மீன்பிடி தொழிலை சார்ந்திருக்கும் மீனவர்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய, கன்னியாகுமரி கடல் பகுதியில் நீர், மண், மீன் மற்றும் பிளாஸ்டிக் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. கன்னியாகுமரி கடல் பகுதியில் ரசாயன மாசு, பிளாஸ்டிக் கழிவுகள், கடல் உயிரினங்களுக்கு பாதிப்பு, மற்றும் மீனவர் வாழ்வாதார இழப்பு போன்ற சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த, தொடர்ச்சியான ஆய்வுகள் மற்றும் மாசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எம்எஸ்சி எல்சா 3 கப்பல் மீட்பு பணிகள்

* எம்எஸ்சி எல்சா 3 கப்பல் மே 25, 2025 அன்று மூழ்கியது. இந்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்தின் மேற்பார்வையின் கீழ், நீருக்கடியில் மீட்பு பணிகள் ஜூன் 9 அன்று தொடங்கியுள்ளன. சீமெக் III என்ற மூழ்காளி ஆதரவு கப்பல் (Diving Support Vessel) பயன்படுத்தப்படுகிறது. இதில் 12 மூழ்காளர்கள், ரிமோட் ஆபரேட்டட் வாகனங்கள், மற்றும் டிகம்ப்ரஷன் அமைப்புகள் உள்ளன. முதல் கட்டமாக, மூழ்காளர்கள் கப்பலின் எரிபொருள் தொட்டிகளின் திறப்புகளை அடையாளம் கண்டு, எண்ணெய் கசிவைத் தடுக்க மூடும் பணியை மேற்கொள்கின்றனர்.

* இரண்டாம் கட்டமாக, ஹாட் டேப்பிங் முறையில் எரிபொருள் தொட்டிகளில் இருந்து எண்ணெய் அகற்றப்படும். இது ஜூலை 3, 2025க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கப்பலில் இருந்து லேசான எண்ணெய் படலம் கடல் மேற்பரப்பில் காணப்படுகிறது. இதை அகற்ற, நந்த் சாரதி, ஆப்ஹோர் வாரியர் ஆகிய சிங்கப்பூர் கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

* இந்திய கடலோர காவல்படையின் சமுத்திரா பாரதி கப்பல், மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக மூழ்கிய இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கடலோர காவல்படையின் டார்னியர் விமானம் எண்ணெய் கசிவை கண்காணிக்கவும், மாசு கட்டுப்பாட்டு ரசாயனங்களை தெளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

எரிந்த கப்பலில் கன்டெய்னர்களில் உள்ள பொருட்கள்

* எம்வி வான்கை 503 கப்பலில் உள்ள கன்டெய்னர்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்கள், எத்தனால், பெயின்ட், டர்பென்டைன், பிரிண்டிங் மை, மற்றும் எத்தில் மெத்தில் கீட்டோன் போன்ற தொழிற்சாலை கரைப்பான்கள் உள்ளன. இந்தப் பொருட்கள் 60.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவான தீப்பற்றல் புள்ளி கொண்டவை. மொத்தம் 50 கண்டெய்னர்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

* எளிதில் தீப்பற்றக்கூடிய திடப்பொருட்கள் நைட்ரோசெல்லுலோஸ் (25% ஆல்கஹால் மற்றும் 12.6% நைட்ரஜன் உள்ளவை) - 2 கன்டெய்னர்களிலும், நாப்தலீன் (கச்சா அல்லது சுத்திகரிக்கப்பட்டவை) - 12 கன்டெய்னர்களிலும், பாராபார்மால்டிஹைடு - 4 கன்டெய்னர்களிலும் உள்ளன.

* திடப்பொருளாக இருந்தாலும் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவம் கொண்டவை ஒரு கன்டெய்னரிலும் உள்ளன. மொத்தம் 20 கன்டெய்னர்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

* தன்னிச்சையாக எரியக்கூடிய பொருட்கள் ஆர்கனோமெட்டாலிக் பொருட்கள் - 4,900 கிலோ. பைபிரிடைலியம் பூச்சிக்கொல்லி 800 டிரம்ஸ், 1,83,200 கிலோ எடை கொண்டது உள்ளது.

* எத்தில் குளோரோபார்மேட் (மிகவும் நச்சுத்தன்மை மற்றும் அரிக்கும் தன்மை கொண்டவை) - 132 டிரம்ஸ், 27,786 கிலோ உள்ளது.

* நச்சுப் பொருட்கள் டைமெத்தில் சல்பேட் மற்றும் ஹெக்ஸாமெத்தில் டையிசோசயனேட் போன்ற நச்சு ரசாயனங்கள். சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான பொருட்களாக பென்சோபெனோன், டிரைகுளோரோபென்சீன், மற்றும் லித்தியம் பேட்டரிகள் (167 பெட்டிகள்) உள்ளன. இவை கடல் சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அந்த வகையில் மொத்தம் 157 கன்டெய்னர்கள் ஆபத்தான பொருட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மீன்பிடிக்க போகாதீங்க; நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி தென்கடலில் அரிச்சல்முனை வரை 5 கி.மீ. தூரத்துக்கு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள் நேற்று முன்தினம் கரை ஒதுங்கியது. கடற்கரையில் ஒதுங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் மூலப்பொருள் கடல் அலையில் சிக்கி மீண்டும் கடலுக்குள் இழுத்து செல்லப்படுவதால் மீன்கள் செத்து மிதக்கும் அபாயம் உருவாகியுள்ளது. ராமேஸ்வரம் மீன்வளத்துறையினர், மன்னார் வளைகுடா கடலில் யாரும் மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம் என நாட்டுப்படகு மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு செய்துள்ளனர். அதேசமயம் மீனவர்கள் யாரும் இதற்கு அச்சப்பட தேவையில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளனர். கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் மூலப்பொருளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பூர்வகுடி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.