Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செபி - அதானி தொடர்பு பற்றி ஜேபிசி விசாரணை கோரி 22ம் தேதி நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: செபி - அதானி தொடர்பு பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி வரும் 22ம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் பொதுசெயலாளர்கள், மாநில தலைவர்கள்கூட்டம் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுசெயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் மற்றும் பல்வேறு மாநில தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மல்லிகார்ஜூன கார்கே தன் எக்ஸ் தள பதிவில், “காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர்கள், மாநில தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் 4 மாநில பேரவை தேர்தல்கள் மற்றும் நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

* செபி மற்றும் அதானிக்கு இடையேயான தொடர்பு பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வௌியாகி உள்ளன. பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள சிறு முதலீட்டாளர்களின் பணத்தை பறி கொடுக்க முடியாது. எனவே, செபி - அதானி தொடர்பு பற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும். செபி தலைவர் மாதபி ராஜினாமா செய்வதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு உடனே எடுக்க வேண்டும். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு(ஜேபிசி) அமைக்க வேண்டும்.

* அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையின்மை, வீட்டு செலவுகள் குறித்து ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும். சாதிவாரி கண்கெடுப்பை நடத்த வேண்டும். ஏழை மற்றும் நடுத்ர மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

* விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய கோரி காங்கிரஸ் தொடர்ந்து போராடும்”.

* மோடி தலைமையிலான கூட்டணி அரசில் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

* அக்னி வீரர் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

* தொடரும் ரயில் விபத்துகளால் கோடிக்கணக்கான ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவநிலை மாற்றம் தொடர்பான பேரழிவுகள் மற்றும் சீர்குலைந்து வரும் உள்கட்டமைப்புகள் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

கூட்டத்துக்கு பின் காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “செபி - அதானி தொடர்பு விவகாரத்தில் செபி தலைவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தியும் வரும் 22ம் தேதி காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்” என்றார்.