கலசப்பாக்கம்: ஜவ்வாதுமலையில் தங்க புதையல் கிடைத்த சிவன் கோயிலில், இன்று 2வது நாளாக தேடுதல் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள கோவிலூர் பகுதியில் திருமூலநாதர் சிவன் கோயில் உள்ளது. 3ம் ராஜராஜ சோழனால் கட்டிய இந்த கோயிலில் ஏற்கனவே 10ம் நூற்றாண்டை சேர்ந்த புலிகுத்தி பட்டான் நடுக்கல் கண்டெடுக்கப்பட்டது. தற்போது கருவறையின் தெற்கு பக்கத்தில் வீரராஜேந்திர சோழனின் 3ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயில் சிதிலமடைந்து ராஜகோபுரம், கருவறை மட்டுமே உள்ளது. இதனால் மலைகிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை மூலம் ரூ.2.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்து புனரமைப்பு பணியை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை கருவறை இருந்த இடத்தில் பள்ளம் தோண்டியபோது பானை கிடைத்தது. அந்த பானையில் 103 தங்க நாணயங்கள் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சண்முகசுந்தரம் தலைமையில் அதிகாரிகள் வந்து தங்க நாணயங்களை கைப்பற்றினர். பின்னர் இந்த தங்க நாணயங்கள் எந்த காலத்தை சேர்ந்தது என தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவலிங்கம் இருந்த இடத்தில் பிரதோஷ நாளில் தங்க புதையல் கிடைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரவியதால் அவர்கள் கோயிலுக்கு சென்று பக்தி பரவசத்துடன் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோயிலில் கிடைத்த தங்க நாணயங்கள், கலசப்பாக்கம் அருகே உள்ள நட்சத்திர கோயில் சுப்பிரமணிய சுவாமி கோயில் கருவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று கலெக்டர் தர்ப்பராஜிடம் அறநிலையத்துறையினர், தொல்லியல்துறையினர் காண்பித்து விவரங்களை தெரிவிக்க உள்ளனர். இதற்கிடையில் தங்க நாணயங்கள் கிடைத்த பகுதியில் வேறு எங்காவது அதேபோல் தங்க நாணயங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என இன்று 2வது நாளாக தொல்லியல் துறையினர், அறநிலையத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
