வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை; சென்னை காசிமேட்டில் கனமழை, கடல் சீற்றம்: பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை
சென்னை: சென்னை காசிமேட்டில் கனமழை, கடல் சீற்றம் காரணமாக பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . சென்னையின் முக்கிய மீன்பிடி துறைமுகங்களில் ஒன்றான காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் தற்போது கன மழையுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வழக்கமாக அமைதியாகக் காணப்படும் கடல், தற்போது சற்று சீற்றமாக இருக்கிறது .
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைப் பின்பற்றி, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மற்றும் படகுகள் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல், தங்களது படகுகளில் பழுது பார்க்கும் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் . இருப்பினும், சிறிய படகுகளில் உள்ள மீனவர்கள் மட்டுமே கரையிலிருந்து ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவு வரை சென்று சிறிய அளவில் மீன் பிடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன . கிழக்கு திசையில் இருந்து நகரும் மேகக் கூட்டங்களால், நகரின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பதிவாகி வருகிறது .
கடல் சீற்றம் மற்றும் மழையின் காரணமாக, கடற்கரையோரப் பகுதிகள், மீன்பிடி துறைமுகம் மற்றும் வாகனங்கள் செல்லும் பகுதிகளிலும் பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனப் போலீசார் நிறுத்தப்பட்டு அறிவுறுத்தி வருகின்றனர்.