கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு அடித்து செல்லப்படும் கரையோர வீடுகள்: கலெக்டரிடம் மீனவ மக்கள் புகார்
உத்தரகன்னடா: கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, கரையோர வீடுகள், அடித்து செல்லப்படுகின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள், கூடுதல் கலெக்டர் சாஜித் அகமது முல்லாவிடம் புகார் அளித்தனர். உத்தரகன்னடா மாவட்டம், அங்கோலா தாலுகா ஹர்வாடா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள், கூடுதல் மாவட்ட கலெக்டர் சாஜித் அகமது முல்லாவை நேரில் சந்தித்து, புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
உத்தரகன்னடா மாவட்டம், உத்தரகன்னடா மாவட்டம், அங்கோலா தாலுகா ஹர்வாடா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தரங்கமேட்டில், கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. பல வீடுகள், கடல் அலையில் அடித்து சென்றன. இதற்கு, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, மழை காலங்களில் கடல் சீற்றத்தால் கரையோரங்களில் உள்ள பல வீடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள், வெள்ளத்தில் மூழ்கின.
தரங்கமேட் கிராமத்தின் பல பகுதிகள் கடல் அரிப்பால் அழிந்து விட்டன. பாரம்பரிய மீனவ குடும்பங்கள் இங்கு வாழ்கின்றன. கடற்கரையைத் தவிர தங்குவதற்கு இடம் இல்லை. கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ குடும்பங்கள் கடல் அரிப்பால் அவதிப்படுகின்றனர். எனவே, மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மழைக்காலத்துக்கு முன், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.