Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குன்னூர் ரயில் நிலைய வளாகத்தில் இயற்கையை பறைசாற்றும் சிற்பங்கள்

*சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு

குன்னூர் : குன்னூர் ரயில் நிலைய வளாகத்திற்குள், நீலகிரியின் வனவிலங்குகள் மற்றும் இயற்கையை வெளிப்படுத்தும் விதமாக வரையப்பட்டுள்ள மயில், யானை, காட்டு மாடு, வரையாடு, புலி, கருஞ்சிறுத்தை சிற்பங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கடந்த 1854ம் ஆண்டு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் வரை, ஆங்கிலேயர்களால் மலைரயில் பாதை அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1899ம் ஆண்டு ரயில் போக்குவரத்து துவங்கியது.

நூற்றாண்டுகளாக இயங்கும் நீலகிரி மலைரயில் துவங்கியபோது, ‘எக்ஸ் கிளாஸ்’ நிலக்கரி நீராவி இன்ஜினுடன் ரயில் இயக்கப்பட்டது. தொடர்ந்து 2002ம் ஆண்டு பர்னஸ் ஆயிலில் இயங்கும் நீராவி இன்ஜினாக மாற்றப்பட்டு இயங்கியது.

சுற்றுச்சூழல் மாசு காரணமாக, பர்னஸ் ஆயில் பயன்படுத்த ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்த பிறகு, குன்னூர் பணிமனையில், சீனியர் டெக்னீசியன் மாணிக்கம் தலைமையில், இரு பர்னஸ் ஆயில் நீராவி இன்ஜின்கள் டீசலுக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் இயக்கப்படும் நீலகிரி மலை ரயிலுக்கு குன்னூர், ஊட்டியில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் அதிக வருவாய், வரவேற்பு மற்றும் நகரங்களின் பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் 1,275 ரயில் நிலையங்களில் புதிய நவீன வசதிகளை நீண்டகால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசு ‘அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தை’ தொடங்கியது.

அதன் அடிப்படையில் ஊட்டி, குன்னூர் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்காக ரயில் நிலையத்தில் அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி, இலவச வைபை, காத்திருப்போர் அறை, கழிப்பிட மேம்பாடு, சுகாதாரம், ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நூற்றாண்டு பழமைவாய்ந்த குன்னூர் ரயில்நிலையம், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், ரூ.6.7 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பித்து, பொலிவுபடுத்தும் பணிகள், 2023 ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. தற்போது, குன்னூர் ரயில் நிலையத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்து, உயிர்ச்சூழல் மண்டலம் குறித்த ஓவியம் நீலகிரியின் இயற்கை காட்சிகள், வன விலங்குகள், மலைரயில் முக்கியத்துவம், பெருமையை சேர்க்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா பயணிகளை கவர தடுப்புச்சுவரில், ‘முரல் ஆர்ட்’ எனப்படும் நீலகிரியின் முக்கியத்துவத்தை சேர்க்கும் வகையில் படைப்பு சிற்பம் அமைக்கப்பட்டுள்ளன.

இதை தவிர, ரயில்வே அலுவலக சுவர்களில் மயில், யானை, காட்டு மாடு, வரையாடு, புலி, கருஞ்சிறுத்தை, முள்ளம்பன்றி, சிறுத்தை, கரடி உட்பட பல்வேறு ஓவியங்கள் சிமெண்ட் வடிவமைப்பு ஏற்படுத்தி, அதில் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலைய வெளிப்புறத்தில் ரயில் ஓவியங்களும், காட்டுமாடு மற்றும் காட்டு யானைகளும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. மரங்களில் இருவாச்சி பறவை, மலபார் அனில் ஆகியவை வரையப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.