கவுகாத்தி: அசாமின் பிரபல பாடகர் ஜூபின் கார்க் சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங்கின்போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அசாமை சேர்ந்த பிரபல பாடகர் ஜூபின் கார்க்(52). ‘யா அலி’ என்ற பாடல் மூலமாக அனைவராலும் அறியப்பட்ட இவர் சிங்கப்பூரில் மூன்று நாள் நடக்கும் வடகிழக்கு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். இந்த விழா நேற்று தொடங்கியது. இந்நிலையில் ஆழ்கடலுக்குள் செல்லும் ஸ்கூபா டைவிங் பயிற்சியின்போது ஜூபின் கார்க் நேற்று எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜூபின் கார்க் உயிரிழந்த செய்தியை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். ஸ்கூபா டைவிங் செய்து கொண்டிருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை முயற்சித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூபின் கார்க் மறைவிற்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, வௌியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோல் ஒன்றிய அமைச்சர்கள் சர்பானந்த சோனோவால், கிரண் ரிஜ்ஜூ, அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் ஜூபின் கார்க் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.