பீஜிங்: சீனாவின் தியான்ஜின் நகரில் கடந்த 2 நாட்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு (எஸ்சிஓ) நடந்தது. இதைத் தொடர்ந்து, 2ம் உலகப் போர் முடிவடைந்து 80ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சீனாவின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு பீஜிங்கில் இன்று நடக்க உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்க உள்ளார். இதனால் மாநாடு முடிந்த பிறகும் சீனாவிலேயே தங்கியிருக்கும் அவர், தலைநகர் பீஜிங்கில் சீன அதிபர் ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
பின்னர், புடினும், ஜின்பிங்கும், மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னாவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். கனிம வளம் அதிகம் கொண்ட மங்கோலியா நாடானது, சீனா, ரஷ்யாவுக்கு இடையே அமைந்துள்ளது. இதனால் 3 நாடுகளுக்கும் பொதுவாக பல விஷயங்கள் இருப்பதாக புடின் கூறினார்.
இதே போல, பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு அளிக்கப்பட்ட பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் முதல் முறையாக சீன அதிபர் ஜின்பிங்கை நேற்று சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.