Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வர வேண்டும் பாக். மக்களுக்கு மோடி அழைப்பு

தாஹோத்: குஜராத் மாநிலம் தாஹோத்தில் நேற்று ரயில் இன்ஜின் தொழிற்சாலையை திறந்து வைத்து ரூ.24,000 கோடியிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகளால் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மோடியை எதிர்த்து போராடுவது எவ்வளவு கடினம் என்பதை தீவிரவாதிகள் தங்கள் கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.  பாகிஸ்தான் மக்கள் தங்கள் அரசாங்கமும் ராணுவமும் தங்கள் சொந்த நலனுக்காக பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே அவர்களின் வாழ்க்கையை அழிக்கும் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் முன்வர வேண்டும். பாகிஸ்தான் மக்கள் அமைதிப் பாதையைத் தேர்வு செய்யாவிட்டால், அவர்கள் இந்திய ராணுவத்தின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும். ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதே சமயம் பாகிஸ்தான் குடிமக்கள் தங்கள் நாடு எங்கு உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும். இந்தியா சுற்றுலாவை நம்பும் அதே வேளையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை சுற்றுலாவாகக் கருதுகிறது. இது உலகிற்கு மிகவும் ஆபத்தானது.

பாகிஸ்தான் மக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன் - அவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள்? இன்று, இந்தியா உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. ஆனால் உங்கள் நிலைமை என்ன? பயங்கரவாதத்தை ஊக்குவித்தவர்கள் உங்கள் எதிர்காலத்தை நாசமாக்கினர். பயங்கரவாதம் என்பது உங்கள் (பாகிஸ்தான்) அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாகும். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் மக்கள் முன்வர வேண்டும் என்றார்.