Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்டாவில் பள்ளிகள் திறப்பு: யானை, குதிரை புடை சூழ பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள்: முகமலர்ச்சியுடன் மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்

தஞ்சாவூர்: நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக முன்னதாக 3 நாட்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பாடபுத்தகங்கள் பள்ளிகளில் கொண்டு சேர்க்கும் பணியும் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்விதுறை அறிவித்த படி நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. முதல் நாளில் அனைத்து மாணவ, மாணவிகளும், அதிகாலையிலேயே எழுந்து குளித்து, சாமி கும்பிட்டு, புது யூனிபார்ம் அணிந்து, பெற்றோர்களிடம் ஆசி பெற்று உற்சாகத்துடன் வீடுகளில் இருந்த பள்ளிக்கு புறப்பட்டனர்.

மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்த அவர்கள் ஆர்வமுடன் தனது புது வகுப்பறையை தேடி அமர்ந்தனர். மேலும் தனக்கு வரப்போகும் ஆசிரியர், ஆசிரியை யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் காத்திருந்தனர். முதல்நாளில் பள்ளிக்கு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்பட்டது. மேலும் முதல் நாளே அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தகங்களும், சீருடைகளும் கொடுக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்ட 701 பள்ளிகளுக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் மாணவ, மாணவிகள் உற்சாகமாக வருகை தந்தனர். பள்ளிகள் திறந்தவுடன் புதிதாக பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வந்து பள்ளியில் விட்டு சென்றனர். அதே போல் 6ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகளும் தங்களது பெற்றோர்களுடன் இரண்டு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்தனர். பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை பள்ளிகளில் இருந்த ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர். வருகை தந்த பெற்றோர்களிடம் பள்ளியின் விதிமுறைகளை பெற்றோர்களிடம் எடுத்து கூறினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கமான உற்சாகத்துடன் துவக்கப்பட்டன மாணவ மாணவிகள் காலையிலேயே சீருடை அணிந்து பள்ளிகளுக்கு வந்திருந்தனர். மயிலாடுதுறை அருகே தர்மபுரத்தில் அமைந்துள்ள குருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவ மாணவிகள் யானை, குதிரை புடை சூழ, தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் மேளதாளங்களுடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து மாலை அணிவித்து ஆசிரியர்கள் புதிதாக பள்ளிக்கு சேரும் மாணவர்களுக்கு மரியாதை செலுத்தினர். திருவாரூர் மாவட்டத்தில் 1289 பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் நேற்று திறக்கப்பட்டது. இப்பள்ளிகளில் பயிலும் 1.57 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், யூனிபார்ம் உள்ளிட்ட கல்வி நலத்திட்டங்கள் முதல்நாளே வழங்கப்பட்டது.

தஞ்சாவூரில் அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டது. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு சந்தனம், குங்குமம் திலகமிட்டு ஆசிரிய ஆசிரியைகள் வரவேற்றனர். இதில் ஒரு பள்ளியில் அதிக தலைமுடியுடன் வந்த மாணவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர், நாளை சீராக தலைமுடியை வெட்டி வரவேண்டும் என்று எச்சரித்து வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பேராவூரணி, வேலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த 22 மாணவர்களுக்கு மாலை அணிவித்து, கிராமத்தில் உள்ள கோவிலில் இருந்து, மேள தாளங்கள் முழங்க சாரட் வண்டியில் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். அரசர் தொடக்கப் பள்ளியில்‌ புதிதாக சேர்ந்த மாணவ- மாணவிகள், அவர்களது பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியர் பிரகதீசு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேள தாளங்கள் முழங்க ஒவ்வொரு மாணவ- மாணவிகளுக்கும் தனித்தனியாக மாலை அணிவித்து ஊர்வலமாக வகுப்பறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் தலைமை ஆசிரியர் குழந்தையின் கையைப் பிடித்து நெல்லில் எழுத வைத்து அவர்களின் கல்வி பயணத்தை தொடங்கி வைத்தார்.

மாணவர்களுக்கு மாலையிட்டு வரவேற்பு

புதிதாக பள்ளியில் சேரும் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியோடு பள்ளியில் சேர்ந்து பயில ஏதுவாக, அவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்று பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி மேலக்கல்கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று புதிதாக பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களையும் ஏற்கனவே மே மாத விடுமுறையில் இல்லங்களில் நேரடியாக ஆசிரியர்களால் சேர்க்கப்பட்ட மாணவர்களையும் தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில் ஆசிரிய பெருமக்கள் மாலையிட்டு மரியாதை செய்து அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தனர். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மேல கல்கண்டார் கோட்டை மாமன்ற உறுப்பினர் சீத்தாலட்சுமி முருகானந்தம் மற்றும் முருகானந்தம் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.