பொள்ளாச்சி : பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறுவதால் ஆழியார் அணை மற்றும் கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.பொள்ளாச்சியை அடுத்த ஆழியாருக்கு உள்ளூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்தும் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், பழனி, கேரள உள்பட வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் இருக்கும். ஆழியாருக்கு வரும் பயணிகள் அணையின் நீர்தேக்க பகுதியை பார்வையிட்டும், பூங்காவை ரசித்தும் செல்கின்றனர். கடந்த மாதங்களில் பெய்த பருவ மழையால், சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.
இந்த நிலையில் தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் கடந்த 2 வாரமாக ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
ஞாயிற்றுகிழமைகளில் மட்டும் ஓரளவு சுற்றுலா வருகின்றனர்.
மற்ற நாட்களில் பயணிகள் கூட்டத்தை காணமுடிவதில்லை. சுற்றுலா பயணிகள் வருகை குறைவால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் அணைப்பகுதியில் நேற்று விடுமுறை நாட்களாக இருந்தாலும், பயணிகள் வருகை மிகவும் குறைந்து, பெரும்பகுதி வெறிச்சோடி இருந்தது.
அதுபோல், வனத்துறை கட்டுப்பாட்டில் வால்பாறை மலைப்பாதையில் உள்ள கவியருவிக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. நாள் ஒன்றுக்கு சுமார் 200க்கும் குறைவான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமார் 350 சுற்றுலா பயணிகள் வந்தனர். அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆழியார் மற்றும் கவியருவிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும்.
ஆனால் 2 வாரங்களாக விடுமுறை நாட்களை தவிர பிறநாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ளது. தற்போது காலாண்டு தேர்வு என்பதால் சுற்றுலா பணிகள் வருகை மிகவும் குறைந்தது. அடுத்து காலாண்டு தேர்வு நிறைவடைந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் போதும், சரஸ்வதி பூஜை விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறை நாட்களில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.