காதலனுடன் சென்னை சென்று திரும்பிய பள்ளி மாணவியிடம் அத்துமீறல் காவலர் போக்சோவில் கைது: அதிரடி சஸ்பெண்ட்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவி மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு தெரியாமல் இருவரும் கடந்த 6ம் தேதி அதிகாலை 4 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்னைக்கு சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவர்கள் இருவரும் சென்னையில் இருந்து பைக்கில் திண்டிவனம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். பிரம்மதேசம் மன்னார்சாமி கோவில் அருகே வந்தபோது அவர்களை, அங்கு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பிரம்மதேசம் காவலர் இளங்கோ மடக்கி பிடித்து விசாரித்துள்ளார். வீட்டிற்கு தெரியாமல் இருவரும் சென்னைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து மாணவனை வீட்டிற்கு போக சொல்லி மிரட்டிய காவலர் இளங்கோ மாணவியை பாதுகாப்பாக காவல் நிலையம் அழைத்து செல்வதாக கூறியுள்ளார். ஆனால் காவல் நிலையம் அழைத்து செல்லாமல் மாணவியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதன் பின் மாணவியை மிரட்டி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது மாணவி போலீஸ்காரர் இளங்கோ தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அந்த புகார் மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி விசாரணை நடத்தி, காவலர் இளங்கோவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
இதற்கிடையே கைதான இளங்கோவை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் எஸ்.பி சரவணன் உத்தரவிட்டார்.

