பாரம்பரிய நெல், நாட்டுக் காய்கறி விதை போன்ற வார்த்தைகள் தற்போது தமிழக விவசாயிகளிடம் அதிகம் புழங்கி வருகின்றன. இது ஓர் ஆரோக்கியமான விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய நெல், நாட்டுக் காய்கறி விதைகள், நஞ்சில்லா இயற்கை விவசாயம் உள்ளிட்ட தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற நாட்டு விதைத் திருவிழா பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நம்மாழ்வார் மரபு வேளாண் நடுவம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு மரபு வகை நெல் ரகங்கள், சிறுதானியங்கள், நாட்டுக்காய்கறிகள் மற்றும் அவற்றின் விதைகள், கீரை விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இவற்றை விவசாயிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இவ்விழாவில் க.சோ.கண்ணன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நாட்டு ரக விதைகளை குழந்தைகளுக்கு பரிசாக வழங்கினார். இதைத் தொடர்ந்து உணவுக்காடுகள் பரவலாக்கல் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தஞ்சை சுந்தர விமல்நாதன் `வன விலங்குகளுக்கு உணவு வழங்கிட பழ மரங்களை வனங்களில் பரவலாக்கம் செய்யலாம். இதன்மூலம் விவசாய நிலங்களில் மயில், குரங்கு, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிப்பு ஏற்படுத்தாது’ என அருமையான யோசனையை முன்வைத்தார்.
மேலும் பாரம்பரிய நெல் ரகங்களில் விளைந்த அரிசிகளை மதிய உணவு திட்டத்தில் சேர்க்க வேண்டும், பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டத்தில் மரபு விதைகள், நாட்டு ரக விதைகளை விவசாயிகளிடமிருந்து வாங்கித் தர வேண்டும், பள்ளிகளில் விவசாயப் பாடப்பிரிவை 1 முதல் 10ம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாக வைக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. கடலூர் மாவட்ட மரபு விவசாயிகள் ஒருங்கிணைப்பாளர் முருகன்குடி முருகன், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தங்க சண்முகசுந்தரம், ராவணன், சுந்தரசேன், பார்த்திபன், சந்திரசேகரன், சதாசிவம், பன்னீர்செல்வம், தமிழ்க்களம் இளவரசன், பழனிசாமி, இளம்பரிதி, மாணிக்கசுந்தரம், தில்லை நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.