திருச்சி: பள்ளிகளின் நுழைவாயிலில் சிசிடிவி அமைப்பதற்கு விரைவில் டெண்டர் விடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகரம் 12வது வார்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிகல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதிய பாடத்திட்டத்தை வகுக்க 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுக்கு தயாராவது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை வளர்ப்பது உள்ளிட்டவற்றை மையப்படுத்தி புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும். புதிதாக 13 பள்ளிகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையை தொடங்க வலியுறுத்தியுள்ளோம்.
அந்தந்த பகுதியில் இருக்கும் மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் பள்ளிகள் செயல்படும். பின்னர் புதிதாக பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும். பள்ளிகளின் நுழைவாயிலில் சிசிடிவி அமைப்பதற்கு விரைவில் டெண்டர் விடப்படும். மேல்நிலைப்பள்ளிகளில் அக்கவுண்டன்சி தேர்வின் போது கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் கோரிக்கைக்கு ஏற்ப கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
