Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் 7,535 ஆசிரியர்கள் நியமனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டில் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறையில் 7,535 ஆசிரியர்கள் நியமனம் மற்றும் தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிவிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடப்பாண்டில் நடத்தப்படவுள்ள தேர்வுகள் குறித்து அட்டவணையும், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் 7,535 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், உதவி நூலகர் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குனர் ஆகிய பதவிகளில் உள்ள 232 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் போட்டித் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும். சட்டப்படிப்பில் இணை பேராசிரியர், சட்டப்படிப்பு உதவி பேராசிரியர், சட்டப்படிப்புக்கு முன்பு உதவி பேராசிரியர் ஆகியவற்றில் 132 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான போட்டித் தேர்வு வரும் மே மாதம் நடைபெறுகிறது.

மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் நியமனம் செய்வதற்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே நடைபெற்றுள்ள நிலையில் போட்டித் தேர்வு வரும் ஜூலை மாதம் நடைபெறுகிறது.

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான அறிவிப்பு வரும் ஜூன் மாதம் வெளியாகும் நிலையில் 180 மாணவர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான 1,915 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் நிலையில் இதற்கான போட்டித் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் பணியில் 1,205 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது.

இதற்கான தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. வட்டார கல்வி அலுவலர் பணியில் 51 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வரும் நவம்பர் மாதம் வெளியாகும் நிலையில் இதற்கான தேர்வு வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி நடப்பாண்டில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் 7,535 ஆசிரியர்கள் நியமனம் மற்றும் தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.