ஏர்வாடி: நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே டோனாவூரில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் களக்காடு அருகே ஊச்சிக்குளத்தில் உள்ள விடுதியில் தங்கி பயிலும் மேலச்செவலை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவனுக்கும், அதே வகுப்பில் படிக்கும் வடுகச்சிமதிலை சேர்ந்த மற்றொரு மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை வழக்கம் போல் வகுப்பறைக்கு வந்த மாணவர்கள் 9 மணியளவில் பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்வதற்காக ஒவ்வொருவராக வெளியே சென்று கொண்டிருந்தனர். அப்போது வடுகச்சிமதிலை சேர்ந்த மாணவன் தன்னை அவதூறாக பேசிய மாணவனை தனது பையில் மறைத்து கொண்டு வந்திருந்த அரிவாளால் முதுகில் வெட்டினார்.
இதனை தடுக்கச் சென்ற அருகில் இருந்த மற்றொரு மாணவனுக்கும் வெட்டு விழுந்தது. இதைதொடர்ந்து கையில் அரிவாளுடன் இருந்த மாணவனை ஆசிரியர்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்கு பதிந்து சக மாணவனை கைது செய்தனர்.