*கல்வி அதிகாரி பேச்சுவார்த்தை
சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரை பள்ளி மாணவர்கள் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு பள்ளி ஆசிரியர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சிவகாசி அருகே திருத்தங்கல்லில் எஸ்.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் திருமங்கலத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். நேற்று முன்தினம் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது பிளஸ் 2 மாணவர்கள் 2 பேர் போதையில் வந்ததாக கூறப்படுகிறது.
இதனை ஆசிரியர் சண்முகசுந்தரம் கண்டித்ததால் மாணவர்கள் மது பாட்டிலால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஆசிரியர் சண்முகசுந்தரம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசிரியரை தாக்கிய 2 மாணவர்களை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் பள்ளியில் நிரந்தர போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து ஆசிரியர்கள் அனைவரும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பள்ளி வளாகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் மாவட்ட கல்வி அதிகாரி சுரேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பினர். இந்நிலையில் பள்ளி ஆசிரியர் சண்முகசுந்தரத்தை தாக்கிய மாணவர்கள் 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.