Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கலை திருவிழா போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. இந்த முறை மாணவர்களிடம் ‘பசுமையும் பாரம்பரியமும்’ என்ற மையக் கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும்.

இந்த போட்டிகள் 1, 2ம் வகுப்பு, 3 முதல் 5ம் வகுப்பு, 6 முதல் 8ம் வகுப்பு, 9, 10ம் வகுப்பு, 11, 12ம் வகுப்பு என மொத்தம் 5 பிரிவுகளாக வயதுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு நடைபெற உள்ளன. இதில் கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல், மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மணற்சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச்சுவை, பலகுரல் பேச்சு, பம்பை, உடுக்கை, பறை, மிருதங்கம், டிரம்ஸ், வயலின், நாதஸ்வரம், கீ போர்டு இசைத்தல், பொம்மலாட்டம் உள்பட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 18ம் தேதி வரையும், குறுவட்ட அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 25 முதல் 29ம் தேதி வரையும் நடைபெறும்.

தொடர்ந்து வட்டார அளவிலான போட்டிகள் அக்டோபர் 13 முதல் 17ம் தேதி வரையும், மாவட்ட அளவிலான போட்டிகள் அக்டோபர் 27 முதல் 31ம் தேதி வரையும், மாநில அளவிலான போட்டிகள் நவம்பர் 24 முதல் 28ம் தேதி வரை நடத்தப்படும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.

மேலும், தரவரிசையில் முதன்மை இடத்தை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க தேவையான பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.