Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆர்டிஇ கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரம்: தனியார் பள்ளிகளுக்கு நவம்பர் 30-ம் தேதி வரை ஐகோர்ட் அவகாசம்

சென்னை : கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு நவம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இந்நிலையில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை அக்டோபர் 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டார்.

இந்த சுற்றறிக்கையை எதிர்த்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கல்விக் கட்டணத்தை திருப்பி வழங்கும் வகையில் மட்டுமே இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் நலச் சங்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன் கவுடர் முன் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் பட்டியலை அனுப்புவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதை ஏற்ற நீதிபதிகள், மாணவர்கள் பட்டியலை அனுப்பாத பள்ளிகளுக்கான கால அவகாசத்தை, நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். பட்டியலைப் பெற்று சரிபார்க்கும் நடவடிக்கைகளை துவங்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மேற்கொண்டு கால அவகாசம் கோரக் கூடாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.