*மக்கள் கோரிக்கை
திருமயம் : அரிமளம் அருகே பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் விஷ கதண்டு கூட்டை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே பூனையன்குடியிருப்பு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி அருகே உள்ள ஒரு பனை மரத்தில் விஷ கதண்டு கூடு ஒன்று உள்ளது. தற்போது அப்பகுதியில் காற்று, மழை பெய்து வரும் வருவதால் கூட்டில் அசைவு ஏற்பட்டு அவ்வப்போது விஷ கதண்டு கூட்டில் இருந்து பறந்து மாணவர்களை அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஏதாவது அதிர்வுகள் ஏற்பட்டு கூட்டில் இருக்கும் விஷ கதண்டுகள் கூட்டமாக வெளிவரும் பட்சத்தில் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் நடக்கும் முன்னர் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பூனையின் குடியிருப்பு பள்ளி அருகே உள்ள விஷ கதண்டு கூட்டை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
