ஊட்டி : நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் பழங்குடியினர் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக ரூ.41.33 லட்சம் மதிப்பில் 3 பள்ளி வாகனங்கள் மற்றும் ரூ.85 லட்சம் மதிப்பில் பழங்குடியினர்களுக்கான 5 நடமாடும் மருத்துவ வாகனங்கள் என 8 வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்துக் கொண்டு, துறை அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு சாவிகளை வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த 6ம் தேதி திருச்சி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு 26 வாகனங்களை பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிகளின் பயன்பாட்டிற்காகவும், கோவை, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பழங்குடியின மக்களின் மருத்துவ பயன்பாட்டிற்காகவும் 20 புதிய நடமாடும் மருத்துவ வாகனங்களை வழங்கினார்.
இதில், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள ஜிடிஆர் கார்குடி, ஜிடிஆர் பொக்காபுரம், ஜிடிஆர் குஞ்சப்பணை ஆகிய 3 பள்ளிகளுக்கு பள்ளி வாகனம் வழங்கப்பட்டது. பழங்குடியின மக்களின் மருத்துவ பயன்பாட்டிற்காக 5 நடமாடும் மருத்துவ வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி வாகனங்கள் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதனை, அந்தந்த பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும்.
அதேபோல், அரசின் மருத்துவ சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.