Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளி, கல்லூரி மாணவ – மாணவியருக்கு மனநலம், போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பயிற்சி..!!

சென்னை: பள்ளி, கல்லூரி மாணவ – மாணவியருக்கு மனநலம், போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஏழை மக்களின் குறிப்பாக மகளிர் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புரங்களிலுள்ள ஏழை எளிய மகளிரை ஒன்றுபடுத்தி, சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து, அச்சுய உதவிக் குழுக்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கி, வலுவான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. தற்போதைய கால மாற்ற சூழ்நிலையிலும், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும், ஒவ்வொரு தனி நபரும் பல்வேறு விதமான மன அழுத்தத்திற்கு உட்பட்டு, பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுய உதவிக் குழு மகளிர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிறந்த மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் உள்ள 388 வட்டாரங்களிலும் 12,525 ஊராட்சிகளில் உள்ள 3,31,510 மகளிர் சுய உதவி குழு ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகளுக்கும், 16,562 பள்ளிகள் மற்றும் 1602 கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவியர்களுக்கு மனநலம் மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு குறித்த பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதில் மன நலம் மற்றும் மன நோய், மன நல கோளாறுகள், தற்கொலை தடுப்பு, கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்கள், சமூக மனநலம், மனநல சட்டம் மற்றும் திட்டங்கள், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. மேலும், வளரிளம் பெண்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் முதியோர்களுக்கான மன நல இடையீடுகள் குறித்தும் பயிற்சியில் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.