கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பட்டியலின மக்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஐயனார் கோயிலில் சுவாமி வழிபாடு செய்தனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள அணைகரைக்கோட்டாலம் கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே கிராமத்தில் உள்ள ஐயனார் கோயிலில் சாமி வழிபாடு செய்ய மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளாக இந்த நிலை இருந்து வந்துள்ளது. ஐயனார் கோயிலில் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டி பட்டியலின மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து ஐயனார் கோயிலில் சாமி வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இருதரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து இருதரப்பினரையும் அழைத்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் லூர்துசாமி தலைமையில் அமைதி பேச்சு நடத்தப்பட்டது. அதில் நீதிமன்ற உத்தரவின்படி பட்டியலின மக்கள் ஐயனார் கோயிலில் சாமி வழிபாடு மட்டுமே செய்ய அனுமதிக்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று பட்டியலின மக்கள், மேளதாளத்துடன் ஐயனார் கோயிலுக்கு சாமி வழிபாடு செய்ய சென்றனர். அப்போது மேளதாளத்துடன் செல்லக்கூடாது எனவும் அமைதியான முறையில் சென்று சாமி வழிபாடு செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனை ஏற்க மறுத்த பட்டியலின மக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் சமரசத்திற்குப் பிறகு பிறகு பட்டியலின மக்கள் ஐயனார் கோயிலில் சாமி வழிபாடு செய்தனர்.