புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் கோரிக்கை
சென்னை: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித்துறை அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி பணியாளர் நலச்சங்கம் மாநில பொதுச் செயலாளர் டி.மகிமைதாஸ், தலைவர் மணிமொழி ஆகியோர் ஓய்வூதியம் கருத்துகேட்பு குழு ககன்திப் சிங் பேடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு தற்போதைய சூழலில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் கிடைக்கும். பழைய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களிடமிருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை மாதம் தோறும் அவர்களின் சம்பளத்தில் அரசு பிடித்தம் செய்து கொள்ளும்.
அரசின் பங்களிப்பு என்று ஒரு பைசா கூட செலுத்தாது. புதிய பங்களிப்பு திட்டம் என்பது ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு மாநில அரசு கட்டுப்பட்டாக வேண்டும். இந்த நிலையில் அரசின் சார்பில் பங்களிப்பு செய்யும் 10 சதவீத தொகையை 14 சதவீதமாக கடந்த ஆண்டு முதல் மாற்றி அமைத்திருக்கிறது ஒன்றிய அரசு. இதனால் அரசு ஊழியரை விட அதிக தொகையை அரசாங்கம் போட்டாக வேண்டிய நிலை. இதுவும் அரசுக்கு கூடுதல் சுமை. பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விட்டால் இந்த கூடுதல் சுமையும் அரசுக்கு இருக்காது.
புதிய திட்டத்தில் இணைந்தால் தால் நிதி நெருக்கடி, நிதிச்சுமைகள், எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை உணர்ந்ததினால் தான் அந்த திட்டத்தில் கையெழுத்து போடாமல் புறக்கணித்தார் மேற்கு வங்க முதல்வர். அதே சமயம் ஆபத்தை உணராமல் திட்டத்தை ஏற்றுக் கொண்ட ராஜஸ்தான், சட்டீஸ்கர், பஞ்சாப், உள்ளிட்ட பல மாநில அரசுகள் ஆபத்தை ஆராய்ந்து தற்போது இந்த திட்டத்தில் இருந்து விலகி விட்டன. இப்படிப்பட்ட சூழலில் பழைய பென்ஷன் திட்டத்தை நமது அரசு நிச்சயம் நிறைவேற்றும் என பெரிதும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.