Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வீட்டில் சோதனை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்துக்குவித்ததாக வழக்குப்பதிவு

திருவண்ணாமலை: அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்து அதிகமாக 125 சதவீத அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ரூ.8 கோடி அளவுக்கு சொத்து குவித்த வழக்கு தொடர்பாக அவர் வீட்டில் சோதனையும் நடத்தப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமசந்திரன் வீட்டில் காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆரணியில் உள்ள சேவூர் ராமசந்திரன் வீடு மட்டுமின்றி அவரது மகன்கள் சந்தோஷ் குமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 7 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்த நிலையில், சேவூர் ராமசந்திரன் வீட்டுக்கு முன்பாக அதிமுகவினர் திரண்டனர். அப்போது அவர்களில் ஒருதரப்பினர் தனியாக முழக்கங்களை எழுப்பியதால், மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக ஆட்சியில் 2016-2021 வரை இந்து சமயத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சேவூர் ராமசந்திரன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் வருமானத்துக்கு அதிகமாக 125% அளவுக்கு அதாவது ரூ.8 கோடி சொத்து குவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச்சட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் சேவூர் ராமசந்திரன், அவரது மனைவி மணிமேகலை, மகன்கள் சந்தோஷ்குமார், விஜயகுமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.