Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சவால்களை எதிர்கொள்ளுங்கள்

வாழ்க்கை முழுவதும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் சாதனைக்கான பாதை என்ற விதியை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். ஆம்! சோதனைகள் இல்லாமல் வென்றால் அது சாதனையே அல்ல, ஒரு விதை முளைத்து வெளியே வருவதற்கு எத்தனை சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. நீர் கிடைக்க வேண்டும், சூரிய ஒளி வேண்டும். இவை எல்லாமும் கிடைத்தாலும், மண்ணில் இருக்கும் போது பூச்சிகளோ, எறும்புகளோ அதை சேதப்படுத்தி விடாமல் இருக்க வேண்டும்.இதைவிட பெரும் சவால் என்னவென்றால், விதையிலிருந்து வெளியே வருகின்ற முளை, மண்ணை முட்டி மோதி வெளியே வந்து தலையை நீட்ட வேண்டும். ஆம்! அடுக்கடுக்கான சவால்களை எதிர்த்து வாழ்க்கை பயணத்தைத் தொடங்க வேண்டும். இதுதான் நிதர்சன உண்மை. இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது கூட “எனக்கு பிரச்சினை கொடுக்காதே என்று வேண்டுவதை விட, எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் துணிவையும், ஆற்றலையும், தன்னம்பிக்கையும் கொடு” என்று வணங்க வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

ஒரு சமயம் ஞானி ஒருவர் தனது கிராமத்தின் எல்லைப் புறத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு வழிப்போக்கன் அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்தான். அவன் இந்த கிராமத்தில் எந்த மாதிரி மக்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள்? நான் இப்போது இருக்கும் கிராமத்தில் இருந்து குடியேற ஒரு இடம் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்று சொன்னார். உடனே அந்த ஞானி நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில் என்ன மாதிரி மக்கள் வாழ்கிறார்கள்? என்று கேட்டார். அவர்கள் சின்ன புத்திகாரர்கள், கொடுமையானவர்கள்,முரடர்கள் என்று சொன்னார். அதற்கு அந்த ஞானி,அதே வகை மக்களே இந்தக் கிராமத்தில் வாழ்கிறார்கள் என்று பதில் அளித்தார். சிறிது நேரம் கழித்து இன்னொரு வழிப்போக்கன் அங்கே வந்தான். அவனும் அதே கேள்வியை கேட்டான். அதற்கு அந்த ஞானி நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில் எந்த மாதிரி மக்கள் வாழ்கிறார்கள் என்று அவனிடம் கேட்டார்.

அந்த வழிப்போக்கன் அங்கே இருக்கிற மக்கள் மிகவும் அன்பானவர்கள், அடக்கமானவர்கள், பண்புடையவர்கள்,நல்லவர்கள் என்று பதிலளித்தார்.அந்த ஞானி நீங்கள் இங்கேயும் கூட அதே மாதிரியான மக்களைத் தான் பார்ப்பீர்கள் என்று சொன்னார்.இந்த உலகம் எப்படி இருக்கிறதோ, அப்படி பார்க்க வேண்டும் என்பதையே இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.இந்த உலகில் உன்னால் எதுவுமே முடியாது என்று பலர் சொன்ன போது, என்னால் எதுவும் முடியும் என்று சாதித்த ஒரு பார்வையற்ற பெண் மணியின் சாதனைக் கதையை பார்ப்போம்.மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரஞ்சல் பாட்டில் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உதவி ஆட்சித்தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.இது ஒரு சாதாரணமான விஷயமல்ல. பிரஞ்சல் பாட்டில் 100 சதவீதம் கண்பார்வையற்றவர் ஆவார்.அடுத்தடுத்து, இரண்டு முறை சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர், தற்போது உற்சாகத்துடன்புதிய பதவியை ஏற்றுள்ளார்.இவர், பிறக்கும்போதே கண் பார்வைக் குறைபாட்டுடன் இருந்தார். சிறுவயதில், முழுமையான கண் பார்வையை இழக்கலாம் என, மருத்துவர்கள் எச்சரித்தனர். அது, விரைவிலே நடந்தது.

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு சக மாணவர் பென்சிலால் பிரஞ்சல் கண்ணில் குத்தியுள்ளார். இதன் விளைவு, அவர் முழுமையாக கண் பார்வையை இழந்துவிட்டார்.பின்னர் இவர், கண் பார்வையற்றோருக்கான பள்ளியில் 5 முதல் 10-ம் வகுப்பு வரை படித்தார். 10 வகுப்பு வரை மராத்தி மொழியில் படித்தவர், 11-ம் வகுப்பு முதல் ஆங்கில மொழியில் படிக்க தொடங்கினார். உயர் நிலைப் பள்ளி படிப்புக்குப் பிறகு, மும்பையில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் சேர்ந்தார். பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான, அனைத்து வசதிகளையும் இந்த கல்லூரி கொண்டுள்ளது. பின்னர், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, எம்.பில் படித்து முடித்தார்.பி.ஹெச்.டி. படிப்பதற்கும் பதிவு செய்த பிரஞ்சல், இதற்கிடையே நெட்(NET), செட்(SET) தேர்வுகளிலும் தேர்ச்சியானார். குடிமைப்பணிக்கான தேர்வு எழுத முடிவு செய்த பிரஞ்சல், அதற்கான புத்தகங்களைச் சேகரிப்பதில் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டார். பிறகு, தமது கணினியில், ‘‘ஸ்கிரீன் ரீடர்’’ மென்பொருளை தரவிறக்கம் செய்தார். அந்த மென்பொருள் இவரது வாழ்க்கையைக் கொஞ்சம் சுலபமாக்கியது. ஹெட்போன் உதவியுடனே பிரஞ்சல் படித்தார். உதவியாளர் ஒருவர், குடிமைப்பணி முதன்மைத் தேர்விலும், முதல்நிலைத் தேர்விலும் இவருக்கான பதில்களை எழுதினார். முதல் முறையாக, குடிமைப்பணி தேர்வு எழுதி தேர்ச்சியடைந்த பிரஞ்சல், அகில இந்திய அளவில் 773வது இடத்தைப் பெற்று சாதனை புரிந்தார்.

இந்திய ரயில்வே கணக்கு சேவைப் பிரிவில், பிரஞ்சலுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பார்வைக் குறைபாட்டைக் காரணம் காட்டி பணி வழங்க ரயில்வே மறுத்துவிட்டது. இதனை அரசின் பார்வைக்கு கொண்டு சென்றதால், இந்திய தபால் துறையில் பணி கிடைத்தது. இந்நிலையில், இரண்டாம் முறை குடிமைப்பணி தேர்வு எழுதியவர், 124வது இடத்தை பெறவே, ஐ.ஏ.எஸ் பணி ஒதுக்கப்பட்டது. முதற்கட்ட பயிற்சிக்கு பிறகு, எர்ணாகுளத்தில் உதவி ஆட்சித்தலைவராக பிரஞ்சல் பொறுப்பேற்றுக் கொண்டார். கோமல் பட்டேல் என்பவரை பிரஞ்சல் திருமணம் செய்துகொண்டார். பிறருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக, ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார். சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு,முயன்றால் முடியும் என்பதற்கு இவரே மிகச் சிறந்த உதாரணம்.

பிரஞ்சல் நல்ல கவிஞரும் கூட, பெரும் திரளான பார்வையாளர்களுக்கு முன்னர் சிறப்பாகச் சொற்பொழிவாற்றக் கூடியவர். தம் மீது பிறரின் அனுதாபப் பார்வைகள் விழுவதை ஒருபோதும் விரும்பாதவர்.இயன்றவரை தன்னுடைய தேவைகளை தாமே பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றல் இவருக்கு உண்டு.தாமாக எவர் துணையும் இன்றி,வீட்டில் இருந்து ஆட்டோ ஸ்டேண்ட் வரை கூடச் சென்று விடுவார்.தற்போது விமானத்தில் தனியாக பயணம் செய்து,செல்ல வேண்டிய இடங்களுக்குத் தனியே சென்று விடுகிறார். சவால்கள் எதிர்கொண்டு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு பிரஞ்சல் பாடிலின் வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு மிகச் சிறந்த உன்னத பாடம் என்பதில் ஐயமில்லை.