ஹாங்காங்: சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் அணியை, அல் அஹ்லி சவுதி அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி, ஹாங்காங்கில் நடந்தது. அதில், போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் அணியும், அல் அஹ்லி சவுதி அணியும் மோதின.
இப்போட்டியின் 41வது நிமிடத்தில் ரொனால்டோ, பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தார். பின் அல் அஹ்லி வீரர் பிரான்க் கெஸ்ஸி 45+6வது நிமிடத்திலும், அல் நஸர் வீரர் மார்செலோ புரோஸோவிக் 82வது நிமிடத்திலும், அல் அஹ்லி வீரர் ரோஜர் இபானெஸ் 89வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் சமநிலையில் இருந்தன. அதையடுத்து வெற்றியை தீர்மானிக்க நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் 5-3 என்ற கோல் கணக்கில் அல் அஹ்லி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
* அல் நஸர் அணிக்காக ரொனால்டோ 100 கோல்
சவுதி சூப்பர் கப் கால்பந்து இறுதிப் போட்டியில் ரொனால்டோ, அல் நஸர் அணிக்காக 100வது கோலடித்து சாதனை படைத்தார். தவிர, 4 வெவ்வேறு அணிக்காகவும், ஒரு நாட்டுக்காகவும் 100 கோலடித்த ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணிக்காக 450, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 145, ஜுவன்டஸ் அணிக்காக 101, அல் நஸர் அணிக்காக 100 கோல்கள் போட்டுள்ளார். தவிர, அவரது சொந்த நாடான போர்ச்சுகல் அணிக்காகவும் 138 கோல்களை ரொனால்டோ அடித்துள்ளார்.