சவுதியுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இதர அரபு நாடுகளும் இணையலாம்: பாக். வெளியுறவு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தகவல்
இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி இனி பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினால் இரு நாடுகள் மீதான தாக்குதலாக கருத்தில் கொள்ளப்படும்.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தில் மேலும் சில நாடுகள் பங்கேற்க முடியுமா என்று பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆசிப், ‘‘ இதற்கான கதவுகள் இன்னும் மூடப்படவில்லை என்று நான் நிச்சயமாக கூறுவேன். பாகிஸ்தானுக்கு அதிக பாதிப்பு இருப்பதால் நேட்டோ போன்ற ஒரு ஏற்பாட்டிற்கு எப்போதும் அழைப்பு விடுத்து வருகிறேன். இது நேட்டோவை போன்ற ஒரு தற்காப்பு ஏற்பாடாகும்” என்றார்.
* மூன்றாவது நாட்டிற்கு எதிரானது அல்ல: பாக்
பாக். வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷப்கத் அலி கான்,’ சவுதியுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் எந்த மூன்றாவது நாட்டிற்கும் எதிரானது அல்ல. இது பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும்’ என்றார்.