* போலீஸ் நிபந்தனைகளை ரத்து பண்ணுங்க என்று ஐகோர்ட்டில் கேஸ் போட்டவங்க
* போலீஸ் சொல்லிதான் கரூரில் இருந்து விஜய் போனாருனு உச்ச நீதிமன்றத்தில் சொல்றாங்க...
கரூர்: தவெக தலைவர் விஜய் ‘மக்கள் சந்திப்பு’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை பிரசாரத்தை கடந்த மாதம் திருச்சியில் தொடங்கினார். இவர் பிரசாரம் செய்யும் இடங்களை குறிப்பிட்டு தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது. குறிப்பாக, தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்ட இடங்கள் எல்லாம் மிகவும் குறுகிய இடமாக அல்லது பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படாத இடங்களாக இருந்தது. இதன் பிறகு போலீசார் சார்பில் பல இடங்கள் கொடுக்கப்பட்டு அதில் இருந்து விஜய் பிரசாரம் செய்யும் இடத்தை தேர்ந்தெடுக்க சொன்னார்கள்.
அதன்படி, விஜய்யின் பிரசார இடத்தை தேர்வு செய்து தவெக மாவட்ட செயலாளர்கள் சார்பில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு போலீசார் வழக்கமாக அனைத்து கட்சி நிகழ்ச்சிகளுக்கும் விதிக்கப்படும் நிபந்தனைகளை விதித்தனர். அதன்படி, பிரசாரத்திற்கு வருபவர்களுக்காக உணவு, குடிநீர், கழிப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகளை செய்து கொடுக்க வேண்டும். பிரசார கூட்டத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகளை அனுமதிக்கக் கூடாது. மின்கம்பங்கள், மரங்கள், கட்டிடங்கள் மீது ஏற கூடாது, ரோடு ஷோ நடத்தக்கூடாது, விஜய் வாகனங்கள் பின்னால் வாகனங்கள் பின் தொடர கூடாது என பல்வேறு நிபந்தனைகளை போலீசார் விதித்திருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களின் பிரசாரத்திற்கு நிபந்தனைகள் விதிக்காமல் பாரபட்சமின்றி அனுமதி வழங்க வேண்டும் என்று தவெக சார்பில் சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘‘அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விதிக்கப்படும் நிபந்தனைகளைதானே போலீசார் விதிக்கின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் நிபந்தனைகளை விதிப்பதை தடுக்க முடியாது. சம்பாவிதங்கள் நடந்தால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா?’’ என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்திருந்தது. இருப்பினும், விஜய் பிரசாரம் செய்த எந்த இடங்களிலும் போலீசார் விதித்த நிபந்தனைகள் தவெகவினர் பின்பற்றவில்லை.
குறிப்பாக, தவெக தலைவர் விஜய், ரசிகர்களை பல மணி நேரம் காக்க வைத்து பிரசார இடத்துக்கு வந்தார். இதனால், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, நாமக்கல்லில் நூற்றுக்கணக்கானோர் மயக்கமடைந்தனர். இதில் உச்சத்தின் கொடூரமாக கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பேசி கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நடந்த உடன் விஜய் அந்த இடத்தை விட்டு கிளம்பி இரு கார்கள் மாறி சென்னைக்கு சென்றுவிட்டார். ஆனால், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தவெக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘விஜய் கரூரில் இருந்து தப்பி ஓட வில்லை. போலீஸ் கேட்டுக்கொண்டதால் தான் அங்கிருந்து கிளம்பி சென்றார்’ என தெரிவித்தார். இதுதான் இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி நெட்டிசன்களும், அரசியல் விமர்சகர்களும் வறுத்தெடுத்து வருகின்றனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் இறந்திருப்பதாக செய்திகள் வந்தவுடன் போலீஸ் சொன்னதால் தான் வெளியேறினோம் என்று விஜய் தரப்பு நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது. ஆனால் நடந்ததே வேறு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அதாவது சம்பவம் நடந்தவுடன் விஜய் அங்கிருக்க வேண்டாம் என்றும், ஏதாவது பக்கத்து மாவட்டத்தில் இருக்குமாறும் போலீசார் கூறியதாகவும், ஆனால் இது தான் சாக்கு என்று விஜய் அவசர அவசரமாக கிளம்பி தனி விமானத்தில் சென்னை சென்றுவிட்டதாகவும், அதை மறைத்து இப்போது நீதிமன்றத்தில் விஜய்யும், விஜய் தரப்பும் இரட்டை வேடம் போடுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் நேரத்துக்கு தகுந்த மாதிரி மாற்றி பேசும் நடிகர் என்பதை விஜய் மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே, அஜித்குமார் வழக்கில், சிபிஐ விசாரணை எதற்கு? எஸ்.ஐ.டி விசாரணைதான் வேண்டும் என்ற விஜய், 41 பேர் பலி சம்பவத்தில் சிபிஐ விசாரணைதான் வேண்டும், எஸ்.ஐ.டி விசாரணை வேண்டாம் என்கிறார். யார் பின்னாடி ஒளிய சிபிஐ விசாரணை என்று அன்று கேட்ட விஜய், இன்று யார் பின்னாடி ஒளிய சிபிஐ விசாரணை கேட்கிறார் என்று அவர் வாயால் சொன்னால்தான் தெரியவரும். போலீசை காரணம் காட்டும் விஜய், கரூர் வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடந்த இடத்துக்கு 50 மீட்டர் முன்னதாக விஜய் வந்த போது, ‘கூட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளது.
எனவே இங்கேயே வாகனத்தை நிறுத்தி பேசி விடுங்கள். இல்லாவிட்டால் விபரீதம் நிகழ வாய்ப்புண்டு’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் விஜய்யுடன் இருந்த ஆதவ் அர்ஜுனா, ‘இல்லை நாங்கள் வேலுச்சாமிபுரத்தில் தான் பேசுவோம்’ என்று கூறி விட்டார். போலீஸ் சொன்னதை அப்போதே கேட்டிருந்தால், இவ்வளவு பெரிய விபரீதம் நடந்திருக்காது. ஏற்கனவே வேலுச்சாமிபுரத்தில் அளவிற்கு அதிகமாக கூட்டம் கூடியிருந்த நிலையில் விஜய்யுடன் வந்த கூட்டமும் சேர்ந்தால் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் போலீசாரின் அறிவுரையை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. நிபந்தனைகளையும் பின்பற்றவில்லை.
இப்படி நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையோ, காவல்துறையின் அறிவுறுத்தல்களையோ தவெக நிர்வாகிகள் கொஞ்சமும் மதிக்கவில்லை. கரூர் சம்பவத்தில் வௌியேற முடியாதபடி கூட்டத்திற்குள் சிக்கிகொண்ட பெண்கள் நீண்ட நேரம் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் இருந்ததாக அங்கிருந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்படி பொதுமக்கள் மற்றும் தன்னை காண வரும் ரசிகர்களின் பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனமாக இருந்து, 41 பேர் அநியாயமாக பலியாக காரணமாக இருந்துவிட்டு இப்போது தனக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் அரசையும் காவல்துறையையும் குற்றம் சொல்வது எந்த வகையில் நியாயம் என பொதுமக்களே கேள்வி எழுப்புகிறார்கள்.
* இதுவரை இரங்கல் கூட்டம் இல்லை 41 பேருக்கு அஞ்சலி செலுத்தவில்லை ஆனால், 16 நாள் துக்கம் அனுசரிப்பா? வாய் கூசாமல் பொய் சொல்லும் ஆதவ் அர்ஜூனா
கரூரில் உயிரிழந்தவர்களுக்காக 16 நாட்கள் துக்க நாட்களாக மிகுந்த வலியுடன் இருக்கிறோம். இன்று எங்கள் தலைவரும் சரி, எங்கள் தோழர்களும் சரி, இந்த 16 நாட்கள் எங்கள் குடும்பத்தில், எங்கள் உறவு, எங்களுடைய மக்கள் இறந்த 16வது நாள் காரியம் முடியும் வரை யாரும் பேச முடியாத அளவு மிகுந்த வலியோடு இருந்து கொண்டு இருக்கிறோம். - ஆதவ் அர்ஜூனா, தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர்.
மனவலியுடன் ஆதவ் அர்ஜூனா பேசி இருப்பதை பார்த்தால், நிஜமாகவே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக 16 நாட்கள் துக்கம் அனுசரித்ததாக நம்பி விடுவார்கள். ஆனால், உண்மையில் நடந்தது என்ன என்று பார்ப்போம்...
* தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு தாமதமாக வந்ததால், அவரை பார்க்க தண்ணீர், சாப்பாடு இல்லாமல் பலமணி நேரம் நின்றிருந்த ரசிகர்கள் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
* கட்சி நிகழ்ச்சிக்காக வந்து உயிரிழந்தவர்களுக்கு இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை. கட்சி தலைமை அலுவலகத்தில் அவர்களின் புகைப்படம் வைத்து மரியதை செலுத்தி இரங்கல் கூட்டம் நடத்தவில்லை. துக்கம் அனுசரிக்கும் வகையில் கட்சி கொடி அரை கம்பத்தில் விடப்படவில்லை.
* தினமும் பனையூர் டூ பட்டினம்பாக்கம் சொகுசு வீட்டிற்கு சொகுசு காரில் செல்லும் விஜய், பக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்று இதுவரை உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. எப்போதும் கட்சி அலுவலகத்தில் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விஜய் உண்மையில் வருத்தப்பட்டிருந்தால் 41 பேருக்கும் மரியாதை செலுத்தி இருக்கலாமே?
* 41 பேர் பலியான சம்பவம் நடந்த ஒரு சில நாட்களில் டேராடூனில் நடக்கும் கூடைப்பந்து விழாவில் பங்கேற்க சென்ற ஆதவ் அர்ஜூனா, 16 நாள் துக்கம் அனுசரிப்பதாக சொல்கிறார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடைப்பந்து விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தும் டெல்லி தங்கி அவர், 41 பேர் பலி விவகாரம் குறித்து சில விவிஐப்பிகளை சந்தித்து நேற்று முன்தினம் திரும்பி உள்ளார்.
* தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அப்போது, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன்தான். எங்களுக்கு தொடர்பில்லை என புஸ்ஸி ஆனந்த் தரப்பில் வாதம் செய்தது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், கடலுக்குள் படகில் பதுங்கி இருக்கும் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து உள்ளார். ஜாமீன் கேட்டு பதுங்கி உள்ள நிர்வாகிகள் 16 நாள் துக்கம் அனுசரித்தது எப்படி?
* 11 நாட்களுக்கு பிறகு வீடியோ காலில் பேசிய விஜய், உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. 2 நாளில் 33 பேரிடம் வீடியோ காலில் பேசியதாக தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் தெரிவித்தார். மற்றவர்களிடம் விஜய் பேசவில்லை என்று கூறப்படுகிறது. கூட்ட நெரிசலில் பலியான கரூர் மாவட்டம், கொடுமுடியை சேர்ந்த சதீஷ்குமாரின் அண்ணன், தங்களுக்கு விஜய் ஆறுதல் சொல்லவில்லை. தங்கள் சாதியை பார்த்து ஆறுதல் சொன்னவில்லை என்று நினைக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
* 41 பேர் பலியான சம்பவத்தில் அவர்களின் குடும்பத்துக்கு இதுவரை பக்க பலமாக தவெக தலைவர்கள் யாரும் இல்லை. விஜய் தொடங்கி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைவருமே வழக்கில் இருந்து தப்பிக்கவே, கீழ் கோர்ட் முதல் உச்ச நீதிமன்றம் வரை வழக்கு போட்டு ஜாமீனுக்காக காத்திருக்கின்றனர்.
* உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியும் இதுவரை வழங்கவில்லை. கேட்டால் போலீஸ் அனுமதிக்காக காத்திருப்பதாக சாக்கு சொல்கிறார் விஜய். போலீஸ் விதித்த கட்டுப்பாடுகளை கடைபிடித்து இருந்தால் 41 அப்பாவி உயிர்கள் போயியிருக்காது. ஆனால், இன்று வழக்கில் இருந்து தப்பிக்க போலீஸ் சொன்னதால் அங்கிருந்து விஜய் சென்றார் என உச்ச நீதிமன்றத்தில் சொல்கிறார்.
* ஒரு வீட்டில் துக்கம் நிகழ்ந்தால் 16 நாட்கள் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார்கள். வெளியில் செல்ல மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுடன் ஆறுதலுக்காக உடனிருப்பார்கள். ஆனால், தவெக நிர்வாகிகள் அப்படி இருந்தார்களா? உண்மை இவ்வாறு இருக்க எப்படி வாய் கூசாமல் 16 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக ஆதவ் அர்ஜூனா பொய் சொல்கிறார்.
41 பேர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற விஜய் போட்ட கண்டிஷன பாருங்க...
1. திருச்சி விமான நிலையம் முதல் கரூர் வரை பயணத்துக்கு உரிய பாதுகாப்பு: விஜய் அவர்களின் வாகனத்துக்கு அருகில் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத வாகனமும் (இரு சக்கர வாகனங்களும் உட்பட) வர முடியாத அளவுக்கு போலீஸ் சோதனை சாவடிகள் மற்றும் மொபைல் ரோந்து அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.
2. விமான நிலையத்தில் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு: திருச்சி விமான நிலையத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை பாதுகாக்க ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
3. கரூர் நிகழ்வு இடம் சுற்றி பாதுகாப்பு: கரூரில் விஜய் பங்கேற்று நிதியுதவி வழங்கும் இடத்தை சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவில் பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், ஏற்பாட்டாளர்களும், பாதுகாப்பு குழுவும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்
4. நிகழ்வுக்கு கட்டுப்படுத்தப்பட்ட ஒருவழி நுழைவு: நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஒரே நுழைவு மற்றும் வெளியேறும் வழி இருக்க வேண்டும். உள்ளே வரும் நபர்கள் முன்பே பட்டியலில் இருக்க வேண்டும் மற்றும் அவர்களிடம் அனுமதி சீட்டு இருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
5. ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடை: விஜய் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் அணுக அனுமதி வழங்க கூடாது. - இதுதான் கரூர் செல்ல விஜய் அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு விவரங்கள்.