Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சனிக்கிழமை நாயகனின் டபுள் கேம் அரசியலில் நிஜ நடிகர்: யார் பின்னாடி ஒளிய சிபிஐ விசாரணை கேட்டு அடம்; நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி விசாரணைக்கு ஏன் பயம்; அஜித்குமார் வழக்கில் ஒரு பேச்சு; 41 பேர் பலி சம்பவத்தில் ஒரு பேச்சு

சினிமாவில் வீர வசனம் பேசி அதிரடி காட்டி ரசிகர்களை கவரும் நடிகர்களில் ஒரு சிலர், நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோவாகத்தான் இருக்கின்றனர். ரீல்ஸ்க்காக வீடியோ போடுபவர்கள் கூட நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக மாறிவிடுகின்றனர். ஆனால், எங்களுக்கு ரோல் மாடல் என கூறி ஹீரோவாக கொண்டாடப்படும் டாப் சினிமா நடிகரின் ஒரு பேச்சுதான் இப்போது வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகரான விஜய், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கி 2 மாநாடுகளை நடத்திவிட்டு, மக்களை சந்திக்க போவதாக, சினிமாவுக்கு சூட்டிங் போவது போல், வியர்வை சிந்தாமல் குளுகுளு கேரவன் என்ற பெயரில் ஒரு பெரிய பஸ்சை எடுத்து கொண்டு ஜாலி டூர் புறப்பட்டார். கட்சி தலைவரானபின் ஓரிரு நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்க வெளியே வந்தவர், முதல்முறையாக தமிழகம் முழுவதும் மக்களை சந்திப்பதாக அறிவித்தார்.

‘மக்களிடம் செல்... மக்களுடன் வாழ்... மக்களிடம் கற்றுக்கொள்... மக்களுக்கு சேவையாற்று...’ என்ற பேரறிஞர் அண்ணாவின் சொல்லை பின்பற்றுங்கள் என்று கட்சியினருக்கு அறிவுரை கூறிய விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை சினிமா சூட்டிங் போல ஆக்கிவிட்டார். என்னுடய கேரியர் உச்சத்தை விட்டு, பல கோடி சம்பளத்தை விட்டு வந்திருக்கிறேன் என அவ்வப்போது சொல்லும் விஜய், அரசியலுக்கும், சினிமாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் உள்ளார். மக்களோடு மக்களாக இருப்பதுதான் அரசியல். ஆனால், விஜய் சினிமாவில் அரசியல் கேரக்டரில் நடிப்பதுபோல், நிஜ அரசியலிலும் நடித்து கொண்டிருக்கிறார். அதாவது, சனி பார்ட்டிபோல், சனிக்கிழமை மட்டும் மக்களை சந்திக்கும் சனிக்கிழமை நாயகன். ப்ரோ, இது அரசியல்...வீக் எண்ட் பார்ட்டி இல்லையென அவர் செல்லும் இடமெல்லாம் போஸ்டர் அடித்து ஞாபகப்படுத்தியும், நடிகருக்கு நடிக்க மட்டும்தானே தெரியும்.

மக்கள் சந்திப்புக்காக அவர் வரும் ஸ்டைலைப் பாருங்கள்.... வீட்டில் இருந்து பல கோடி மதிப்பிலான காரில் கிளம்புவார். ஏர்போர்ட்டுக்கு வருவார்... அங்கிருந்து தனி விமானத்தில் செல்வார்... மீண்டும் அங்கிருந்து பல கோடி காரில் பிரசார இடத்துக்கு செல்வார்... பின்னர் சினிமா சூட்டிங் கேரவனில் மக்களை சந்திப்பார்... ஆக, மொத்தம் விமானம், கார், பஸ்சில் மட்டுமே செல்வார். மக்களுடன் செல்ல மாட்டார். இதுதான், விஜய்யின் அரசியல் ஸ்டைல்.

உச்சபட்ச நடிகரை நாம் நேரில் பார்த்து விடலாம் என்ற ஆசையில் விஜய் பிரசாரம் செய்யும் இடத்திற்கு மக்கள் குழந்தைகளோடு வந்திருந்தனர்.

ஆனால், ஒவ்வொரு முறையும், மக்கள் சந்திப்புக்கு ஒரு நேரத்தை சொல்லிவிட்டு, குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் பல மணி நேரம் தாமதமாக விஜய் வந்தார். இதனால் தண்ணீர், சாப்பாடு இல்லாமல் பலர் மயங்கி விழுந்தனர். கட்டுப்பாடற்ற ரசிகர்களின் அட்டூழியத்தால் மக்களுக்கு இடையூறு, பொது சொத்துக்கள் சேதம், வியாபாரம் பாதிப்பு என அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டனர். இதில் உச்சபட்சமாக கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். விஜய் பேசிக் கொண்டிருந்தபோது பலர் மயங்கி விழுகின்றனர்.

சிலர் தண்ணீர் கேட்டு விஜய் கவனத்தை ஈர்க்க பாட்டில், செருப்பு வீசுகின்றனர். ஆனால், விஜய் தொடர்ந்து பேசி கொண்டிருந்தார். சில நொடிகளில் விஜய்யின் பாதுகாவலர்கள், தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விஜய் காதில் நிலைமை மோசமாக இருப்பதாக சொன்னதும், அவசர அவசரமாக அங்கிருந்து விஜய் புறப்பட்டார். கரூரில் இருந்து 2 கார்கள் மாறி திருச்சி ஏர்போர்ட் வந்தவர், நிருபர்கள் கேள்விக்கு பதில் கூட அளிக்காமல் தனி விமானத்தில் சென்னைக்கு பறந்து, அங்கிருந்து சொகுசு காரில் சோக முகத்துடன் வீடு போய் சேர்ந்தார். 2ம் கட்ட தலைவர்களும் அதே நிமிடமே அந்த இடத்தை விட்டு, ஓடிவிட்டனர். இதுவரை அங்கு செல்லவில்லை.

முன்ஜாமீன் கேட்டு தலைமறைவாகி உள்ளனர். அதிலும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடலுக்குள் படகில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து, 3 நாட்களுக்கு பின் ஒரு வீடியோ போட்டார் விஜய். அதில் 41 பேர் பலியான சம்பவத்துக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. கட்சி சார்பில் ஒரு இரங்கல் கூட்டம் நடத்தவில்லை. கட்சி கொடியும் அரை கம்பத்தில் பறக்கவில்லை. பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் தர எண்ணுவதாக கூறினார். அந்த ரூ.20 லட்சத்தை எண்ணுவதற்கு விஜய்க்கு இவ்வளவு நாள் ஆகிறதுபோல... அதுதான் இன்னும் ரூ.20 லட்சத்தை கொடுக்காமல் எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் 41 பேர் பலியான ஈரம் காய்வதற்குள் தவெக அலுவலகத்திலும், விஜய் வீட்டிலும், 41 பேர் சாவுக்கு காரணமான பிரசார பஸ் மற்றும் கார்களுக்கு வாழைமரம் கட்டி, அலங்காரம் செய்து படையலிட்டு விஷேசமாக ஆயுதபூஜை கொண்டாடப்பட்டுள்ளது. நடிப்பு...நடிப்புதான்... அரசியல்...அரசியல்தான்...அரசியலில் நாம் பேசும் வார்த்தைகள் ரொம்ப முக்கியம். யோசித்து பேச வேண்டும் என்பார்கள். அதுவும் இப்போது இருக்கும் நவீன தொழில்நுட்ப காலத்தில் அரசியலில் ‘வரலாறு முக்கியம் அமைச்சரே...’ என்ற வாசகம் தான் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். அரசியலுக்கு நடிகராக வந்து யாரோ எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட்டை பேசி ஒவ்வொரு பொய்களுக்கும் தகுந்த பதிலடி வாங்கி வந்த விஜய், அரசியலில் நிஜ நடிகர் என நிரூபித்து உள்ளதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

* சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக சொல்லப்பட்ட வழக்கில் திருப்புவனம் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டபோது, போலீஸ் தாக்கியதில் இறந்தார்.

* இந்த வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட 6 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

* அஜித்குமார் குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ காலில் பேசி, ‘நடக்க கூடாத சம்பவம் நடந்துவிட்டது. காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரொம்ப சாரி மா. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். உங்களுக்கு அரசு துணை நிற்கும்‘ என்று கூறினார்.

* இந்த சம்பவத்தை கண்டித்து சென்னையில் விஜய் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதுதான், அவர் கட்சி ஆரம்பித்த பின் நடத்திய முதல் போராட்டம். அப்போது அவர் பேசியது:

சிபிஐ, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவோட கைப்பாவையாகத்தான் இருக்கு. அங்கு போய் ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள். ஏன் என்றால், தவெக சார்பில் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலானய்வு விசாரணை (எஸ்ஐடி) குழு அமைக்க வேண்டும் என்று ரொம்ப ஸ்ட்ராங்கா கேட்டு இருக்கோம்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிபிஐ மேல் நம்பிக்கை இல்லை. சிறப்பு புலனாய்வு விசாரணைதான் வேண்டும் என்றவர், இன்றைக்கு அவருடைய பிரசாரத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் சிபிஐ விசாரணைதான் வேணுமாம்...சிறப்பு புலனாய்வு விசாரணை வேண்டாமாம்... சிபிஐ கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உள்ள நிலையில், தவெக மற்றும் பாஜ சார்பில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர். இதேபோல், சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை ரத்து செய்யக்கோரி தவெக தலைவர் விஜய் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு வருகிறது. இதன் மூலம் தவெகவின் நாடகம் அம்பலமாகி உள்ளது. இதை பார்க்கும் போது ‘உனக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா’... அது வேற வாய்...இது நாற வாய்... என்ற டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது என்று நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

* 41 பேர் பலி சிபிஐ விசாரணை கேட்கும் விஜய், யார் பின்னாடி போய் ஒளியப் போகிறார்? 41 பேர் பலியான சம்பவத்துக்கு பாஜ தூதர் தவெக நிர்வாகிகளை சந்தித்தது ஏன்?

* எதிர்க்கட்சிகளே பாராட்டும் நேர்மையான அதிகாரியான அஸ்ரா கார்க் தலைமையில் எஸ்ஐடி விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணைக்கு விஜய் பயப்படுவது ஏன்?

* வீடியோ கால் விஜய்

அஜித்குமார் குடும்பத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ காலில் பேசி, ஆறுதல் சொல்லி, சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து சாரி கூறினார். இதை தவெக நிர்வாகி ராஜ்மோகன், எங்கள் தலைவர் வீடியோ காலில் பேசுபவர் அல்ல எனக் கூறியிருந்தார். தற்போது, 41 பேர் பலியான குடும்பத்தினருடன் நேரில் போய் ஆறுதல் சொல்லாமல் விஜய் வீடியோ காலில்தான் ஆறுதல் சொன்னாரு... அதுவும் நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்து கட்சியினர், ரசிகர்களை நடுரோட்டில் விட்டு சென்ற விஜய்க்கு தலைமை பண்பே இல்லை.. இது ஒரு கட்சியா என காட்டமாக பதிவு செய்திருந்தது. இதையடுத்தே விஜய் வீடியோ காலில் பேசினார்.

* அன்று ரகசியமாக... இன்று அனுமதிக்காக...

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதா, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஸ்டோலின், மடப்புரம் காவலாளி அஜித்குமார் ஆகியோர் வீட்டிற்கு நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி நள்ளிரவு நேரத்தில் ரகசியமாக சென்று ஆறுதல் சொன்ன விஜய், தற்போது 41 பேர் பலிக்கு ஆறுதல் சொல்ல போலீசிடம் அனுமதி கேட்டு காத்திருப்பதாக கூறி வருகிறார். ஒரு துயர சம்பவம் நடந்திருக்கு... இதற்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் சொல்லி நிதியுதவி அளித்து உள்ளனர். விஜய் கரூர் செல்ல தடை என்று நீதிமன்றமோ, காவல்துறையோ சொல்லவில்லை. இந்த துயர சம்பவம் பாதுகாப்பு பிரச்னையால் ஏற்படவில்லை. கட்டுப்பாடற்ற ரசிகர்களால் ஏற்பட்டது. மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர் என்று நீதிமன்றமே கூறி உள்ளது. ஆனால், விஜய் அங்கு செல்ல பயந்து, கரூர் செல்ல அனுமதிக்காக காத்திருப்பதாக மக்களிடம் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.