வாரத்தில் 4, 5 நாள் வெளியூரில்தான் இருப்பேன் சனிக்கிழமைகளில் மட்டும் வெளியே வருபவன் அல்ல நான்: நடிகர் விஜய் பிரசாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் மறைமுக தாக்கு
சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த நிர்வாகிகள் 350 பேருக்கு பொற்கிழி, கல்லூரி மாணவ-மாணவிகள் 150 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை, 150 திருநங்கைகளுக்கு புத்தாடை, உதவித்தொகை, 250 பெண்களுக்கு சுய உதவி குழு நிதி வழங்கும் விழா சென்னை வேப்பேரியில் நேற்று நடந்தது. அமைச்சர் பி.கேசேகர்பாபு விழாவுக்கு தலைமை வகித்தார்.
விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திமுக நிர்வாகிகளுக்கு பொற்கிழி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த 2023 செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 20 லட்சம் பெண்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.24 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.
நான் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறேன். வாரத்தில் 4, 5 நாட்கள் வெளியூரில்தான் இருப்பேன். நான் வெறும் சனிக்கிழமை, சனிக்கிழமைகளில் மட்டும் வெளியே வருபவன் அல்ல. ஞாயிற்றுக்கிழமையானலும் வெளியேதான் சுற்றிக் கொண்டிருப்பேன். நான் கிழமை பார்ப்பது கிடையாது.
தி.மு.க. பாக முகவர்கள் தங்களுக்குள் இருக்கும் மனக்கசப்புகளை 6 மாதங்களுக்கு மறந்து விட வேண்டும். 6 மாதம் தினமும் மக்களை சந்தித்து திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும்.
தற்போது புதுபுது கட்சிகள் வந்திருக்கிறது. அவர்களுக்கு கொள்கை என்றால் என்னவென்று தெரியவில்லை. ‘ஏதோ வந்தோம். விசில் அடித்தோம்’ என்று இருக்கிறார்கள். நாம் வெறும் விசில் அடிக்கவும், கைத்தட்டவும் கூடுகிற கூட்டம் கிடையாது. இது கொள்கை கூட்டம். இந்திய அரசியலில் நம் தலைவருக்கு நிகராக இன்னொரு தலைவர் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.