சாத்தான்குளத்தில் இறந்தது யார் என்று கூட தெரியவில்லை வசனம் எழுதி கொடுத்ததை விஜய் வாசிச்சிட்டு போறாரு...சபாநாயகர் அப்பாவு கலாய்
நெல்லை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைக்க நெல்லை டவுனில் நடந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் எல்லா துறைகளும் சிறப்பாக செயல்படுகிறது. உண்மையை கூறிய தமிழ்நாடு கவர்னருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். காவிக்கு பின்னால் ஒளிய வேண்டிய அவசியம் தமிழ்நாடு முதல்வருக்கு இல்லை.
சாத்தான்குளம் சம்பவத்தில் இறந்தது யார் என்று கூட நடிகர் விஜய்க்கு தெரியவில்லை. ஜெயராஜை ஜெபராஜ் எனக் கூறுகிறார். வசனம் எழுதி கொடுத்ததை வாசிச்சிட்டு போராரு... அப்போதைய முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று அஜித்குமார் சம்பவம் வெளிவந்தவுடனே முதல்வர் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டார். சிபிஐ விசாரிக்கட்டும் என உத்தரவிட்டுள்ளார்.
காவலர்கள் செய்த தவறுக்காக அந்த குடும்பத்தை தொடர்பு கொண்டு முதல்வர் வருத்தம் தெரிவித்தார். அவரது சகோதரருக்கு வேலை கொடுத்துள்ளார். வருமான வரித்துறையில் வேலைபார்த்த அருண்ராஜ், அமித்ஷா சொல்லை கேட்டு நடிகர் விஜய் கட்சியில் சேர்ந்துள்ளார். வருமான வரித்துறை விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியது. யார் அழுத்தத்தால் வருமான வரித்துறை அவரது வீட்டில் சோதனைக்கு சென்றது. புஸ்சி ஆனந்த் அமித்ஷாவுடன் தொடர்பு உள்ளவர்.
வருமானவரித்துறை அதிகாரி, புஸ்சி ஆனந்த் ஆகியோருக்கு விஜய் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் கேட்காத போது எப்படி கொடுத்தார்கள்?.ஒன்றிய அரசு, பாஜ சொல்லித்தான் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். விஜய்யின் தாய் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த சிறுபான்மையினர் ஓட்டுக்களை பிரிப்பதற்காக அவரை கட்சி தொடங்கச் சொல்லியுள்ளனர். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.