பெங்களூரு:கர்நாடக மாநிலத்தின் தென்கனரா மாவட்டம், பெல்தங்கடி தாலுகா, தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக புகார் கொடுத்த சின்னய்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையில் தர்மஸ்தலாவில் பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரின் பின்னால், தமிழ்நாட்டை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கை வரிசை இருப்பதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக கர்நாடக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கங்காவதி தொகுதி சட்டப்பேரவை பா.ஜ எம்எல்ஏவுமான ஜனார்தனரெட்டி குற்றம் சாட்டி இருந்தார்.
அவரின் குற்றச்சாட்டிற்கு சசிகாந்த் செந்தில் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.இந்நிலையில் தர்மஸ்தலா விவகாரத்தில் தேவையில்லாமல், தன்னை தொடர்புப்படுத்தி பேசி இருப்பதன் மூலம் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் குற்றச்சாட்டு கூறிய, ஜனார்தனரெட்டிக்கு எதிராக பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில், சசிகாந்த் செந்தில் எம்பி, நேற்று மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். அம்மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.