Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள்.. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை!!

குஜராத்: சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை ஒட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக இன்று கொண்டாடப்பட்டுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து சிலைக்கு மலர் தூவப்பட்டது. அப்போது பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் பிரதமர் மோடி தலைமையில் ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் பிரதமர் மோடி குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொண்டு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கவுள்ளார்.

இதையடுத்து டெல்லியில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை ஒட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளனர்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்தார் வல்லபாய் படேல் ஒரு சிறந்த தேசபக்தர். தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பியவர். அவர் தனது அசைக்க முடியாத உறுதிப்பாடு, அசாத்திய தைரியம் மற்றும் திறமையான தலைமை மூலம் நாட்டை ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணியை நிறைவேற்றினார். அவரது அர்ப்பணிப்பும் தேசிய சேவை மனப்பான்மையும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, நாம் ஒன்றுபட்டு, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளில் இந்தியா அவருக்கு மரியாதை செலுத்துகிறது. இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு பின்னால் உந்து சக்தியாக அவர் இருந்தார், இதன் மூலம் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அதன் விதியை வடிவமைத்தார். தேசிய ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் பொது சேவை மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இளம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. தன்னம்பிக்கை கொண்ட இந்தியா என்ற அவரது தொலைநோக்கு பார்வையை நிலைநிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.