திரையுலகில் என்னைத் தாங்கிப்பிடித்த ஒரு தங்கத் தூண் சாய்ந்துவிட்டதே :ஏவி.எம்.சரவணன் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!!
சென்னை :கவிஞர் வைரமுத்து திரைப்பட தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது,
"மதிப்புக்குரிய
ஏவி.எம்.சரவணன்
இயற்கை எய்திவிட்டார்
இன்று
என் அதிகாலையின் இருள்
வடியவே இல்லை
என்னசொல்லிப் புலம்புவது?
44 ஆண்டுகால நட்பு
காலமாகிவிட்டது என்று
கலங்குவேனா?
ஏவி.எம்மின் அடையாளம்
போய்விட்டதே என்று
வருந்துவேனா?
ஆயிரம் பறவைகளுக்குக்
கனி கொடுத்த
கலை ஆலமரத்தின்
கிளை முறிந்ததே என்று
வாடுவேனா?
திரையுலகில்
என்னைத் தாங்கிப்பிடித்த
ஒரு தங்கத் தூண்
சாய்ந்துவிட்டதே என்று
கலங்குவேனா?
கலையுலகில்
எங்களது சந்திப்பு மையம்
வெறிச்சோடிவிட்டதே என்று
விசும்புவேனா?
நண்பர் சகோதரர் வழிகாட்டி
இனி யார் உண்டு என்று
தவிப்பேனா?
தமிழ்த் திரையுலகின்
வரலாறு சொல்லும் ஆசிரியர்
மறைந்துவிட்டாரே என்று
பதைப்பேனா?
புரியவில்லை
எனது மகா ரசிகர்
ஏவி.எம் நிறுவனத்தில்
அதிகமான பாடல்
எழுதிய கவிஞர் என்ற
அருமையான பெருமையை
எனக்களித்தவர்
எல்லாராலும் மதிக்கப்பட்ட
வெள்ளுடை ஆளுமை
கையொடிந்து தவிக்கிறது
இன்று கலையுலகம்
அவரை இழந்துவாடும்
குடும்பத்தார்க்கும்
கலையுலகத்துக்கும்
என் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவிக்கிறேன்
அவர் நினைவுகள்
நீடு வாழும்
என் ஆறாத்துயரம் ஆறுவதற்குக்
காலமே கைகொடு,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

