Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூய்மைப்பணியாளர்கள் பிரச்னைக்கு முதல்வர் தீர்வு காண வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: தூய்மைப்பணியாளர்கள் பிரச்னையில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செல்வப்பெருந்தகை (காங்): தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் இரவு அப்புறப்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது. நீதிமன்றம் கூறினாலும் கூட காவல்துறை தாயுள்ளத்தோடு அணுகியிருக்க வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களையும், அவர்களுக்காக போராடிய ஜனநாயக சக்திகளையும் விடுவிக்க வேண்டும்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டம் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைப்பதாலேயே பிரச்னை எழுந்துள்ளது. பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது என்று அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. எனவே, போராடும் தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): கோரிக்கை வலியுறுத்தி போராடிய தூய்மைப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு, உடனடியாக போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவாக பேசியவர்களையும், ஆதரவு தெரிவிக்க வந்தவர்களையும் காவல்துறையினர் தாக்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பிரச்னைகளுக்கு நியாயமான தீர்வு காண வேண்டும்.

பிரேமலதா (தேமுதிக): போராடிய தூய்மைப்பணியாளர்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது. உடனடியாக முதல்வரும், துறை சார்ந்த அமைச்சர்களும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஜவாஹிருல்லா வலியுறுத்தல் (மமக): பணி நிரந்தரம் மற்றும் தனியார் மயத்தை எதிர்த்து அற வழியில் போராடிக்கொண்டிருந்த தூய்மைப்பணியாளர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. உடனடியாக, போராடிய தொழிலாளர்கள் அனைவரையும் விடுதலை செய்து அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யவேண்டும்.

அன்புமணி (பாமக): சென்னை மாநாகராட்சி தூய்மைப் பணியாளர்களை கைது செய்து அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் குப்பை அகற்றும் தனியார் நிறுவனத்திற்கு தரும் தொகையில் தூய்மைப்பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய முடியும். எனவே அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.