சென்னை: துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிராம ஊராட்சிகளின் சுகாதாரம் பேண துப்புரவு பணியாளர்களும், குடிநீர் விநியோகம் செய்ய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களும் என 1.20 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். உள்ளாட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து 2017ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் அடிப்படை சம்பளம் ரூ.5029 அகவிலைப்படி சேர்த்து ரூ.11,029 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவருக்கு ரூ.13,029 ஊதியம் வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக பல வழக்குகள் நடைபெற்று, நீதிமன்ற உத்தரவு வழங்கிய பின்னரும் ஏராளமான உத்தரவுகள் அமலாக்கப்படவில்லை. 70 ஆண்டுகளுக்கு மேலாக பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முழுநேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என துப்புரவு தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 3 ஆண்டுகள் பணி முடித்தால் காலமுறை ஊதியம் வழங்கவும், 10 ஆண்டுகள் பணி முடித்தால் பணி நிரந்தரம் செய்யவும் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்து உத்தரவு வழங்கியதாக தெரியவில்லை. எனவே தமிழக அரசு துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆகியோரின் அவசிய பணியை கவனத்தில் கொண்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.