பெரம்பூர்: இந்து சமய அறநிலயைத்துறையின் இறைப் பணிகளுக்கு சங்கிகள் பெரும் தடையாக உள்ளனர் என்று அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள சேமாத்தம்மன் கோயிலில் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று துவக்கிவைத்தார்.
இதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; திமுக ஆட்சியில் கோயில்களில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனவரி மாதத்தில் இந்த கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. திமுக ஆட்சி அமைந்து தமிழ்நாட்டில் உள்ள 3707 கோயில்களில் இதுவரை குடமுழுக்கு நடந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆக்கிரமிப்பில் இருந்து 8 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
14,746 கோயில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் இதுபோன்ற இறைப்பணிகளில் சங்கிகள் பல தடைகளை உருவாக்கி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக நடந்துவருகிறது. இந்து சமய அறநிலையத்துறையில் தற்காலிகமாக பணி செய்து வந்த 2500 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக திருக்கோயில்களில் பணிபுரியும் 1,500 தற்காலிக பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றப்பட உள்ளனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அப்போது சென்னை மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை இருந்தனர்.