Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சங்கிகளின் கூடாரம் மகிழவே பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்து கூறியதாவது;

திருக்கோவில்கள் சார்பில் 25 பள்ளிகள், 1 பாலிடெக்னிக் கல்லூரி, 9 கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 22,455 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 19 திருக்கோவில்களில் மருத்துவமனைகள் தொடங்கியுள்ளோம். உணவு, கல்வி, மருத்துவத்திற்கு அதிக கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. 1,000 ஆண்டுகளுக்கு முன்பே கோவில்களில் கல்விச்சாலையும், மருத்துவ சாலையும் மன்னர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது.

கல்லூரி, பல்கலைக்கழகம் கோவில் கட்டடக்கலையை கொண்டு கட்டிக்கொள்ளலாம் என சட்டத்தில் இடம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கல்வில் நிலையங்கள் தொடங்கியுள்ளோம். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கோயில் நிதியில் கல்லூரிகள் இயங்குகின்றன. இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்தான் பயில்கின்றனர்.

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டு 2,500 பேர் படிக்கின்றனர்; சோழர்கள் காலத்தின் கூட கோயில் சார்பில் கல்விச் சாலைகள் இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்து சமய அறநிலையத்துறை அறப்பணியுடன், அறியாமையை நீக்கும் கல்வி பணியையும் செயல்படுத்தி வருகிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட்டன, இதுவும் சதிச் செயலா? அதிமுக தலைவர்களை இபிஎஸ் ஏற்கவில்லை என தெளிவாகத் தெரிகிறது. பாஜக எனும் மலைப்பாம்பு அதிமுகவை சிறுக சிறுக விழுங்கி வருகிறது. அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் மருதமலை கோயில் சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் கோரிக்கை வைத்தார்.

அதிமுக எம்எல்ஏக்கள் பெரியபுள்ளான், அமுல் கந்தசாமி, ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கோயில் சார்பில் கல்லூரி வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளனர். சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். வரலாறு தெரியாமல், சங்கிகள் வைக்கும் கோரிக்கையை இபிஎஸ் வெளிப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.