Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சங்க இலக்கியங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் விருப்பத்தை நிறைவேற்றுவேன்: இளையராஜா உறுதி

சென்னை: சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன், இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டுக்கான பாராட்டு விழா, தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டது. விழாவில், இளையராஜா லண்டனில் இசை அமைத்து சாதனை படைத்த சிம்பொனி இசையை தமிழக மக்களுக்காக வழங்கினார். மேலும், அவரது பெயரில் இனி ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் அறிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேற்று இளையராஜா வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் பேசியிருப்பதாவது:  கடந்த சனிக்கிழமை தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகமாக பேச முடியவில்லை. இந்த விழாவை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. ஒரு பாராட்டு விழாவை இவ்வளவு சீரும் சிறப்புமாக நடத்த நமது முதல்வர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும்.

ஒரு தமிழன் சிம்பொனி சிகரம் தொட்டதை பாராட்டுவது என்பது தமிழக அரசின் கடமை என்று அவர் நினைத்ததால்தான் இதை அவர் செய்தார். முதல்வர் என்னிடம், ‘தமிழ் சங்க இலக்கியங்களை இசை அமைத்து வெளியிட வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தார். அது என்னால் மட்டுமே முடியும் என்றும் அவர் சொன்னார். அவரது வேண்டுகோளை கண்டிப்பாக நான் நிறைவேற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. கமல்ஹாசனின் படங்களுக்கு மட்டுமே நான் நல்ல பாடல்களை கொடுக்கிறேன் என்று ரஜினிகாந்த் சொல்கிறார். ரஜினிகாந்த் படங்களுக்கு மட்டுமே நான் நல்ல பாடல்களை கொடுக்கிறேன் என்று கமல்ஹாசன் சொல்கிறார்.

மொத்தத்தில் இருவருக்கும் நான் நல்ல பாடல்களை கொடுத்துள்ளேன் என்பதை அவர்களே சொல்லிவிட்டார்கள். மேடையில் சொன்னது போல், சிம்பொனி இசையை சிலர் மட்டுமே கேட்கவும், பார்க்கவும் முடிந்தது. விரைவில் தமிழக மக்களுக்காக சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தப்படும். அதை உங்களை போல் நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு இளையராஜா பேசியுள்ளார்.

* ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘இசை உலகில் தமிழுக்கும், தமிழருக்கும் மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கே தனி பெருமையை தேடி தந்தவர் இசைஞானி. இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கே அமைந்த மாமனிதர் அவர். சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கு நிலவிய வேறுபாடுகளை, தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசை மேதை அவர்.

குறிப்பாக, திரை இசையை கடந்து, முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில் அவர் நிகழ்த்தி இருக்கும் சிம்பொனி என்ற சாதனை, ஒவ்வொரு இசைக் கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமை செய்ய ஊக்கமளிக்கக் கூடிய சாதனையாக இருக்கிறது. அவரை பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எப்போதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதில், உங்களை போலவே நானும் பேருவகை கொள்கிறேன். இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டை தமிழக அரசே ஒருங்கிணைத்து கொண்டாடியதில், இளையராஜாவுக்கு மட்டுமே ஆன விழாவாக இல்லாமல், ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்குமான அங்கீகாரமாக பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.