Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மண் செழித்ததால் மகசூலும் செழித்தது...மகிழ்கிறார் மரவள்ளி விவசாயி..

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம் கந்தகவுண்டனூர். சுமார் 800 வீடுகளைக் கொண்ட இந்த ஊரில் அனைவருக்கும் பொதுவான தொழில் விவசாயம்தான். கரிசலும் செம்மண்ணும் கலந்து இருக்கும் இந்த ஊரின் பிரதான விவசாயப்பயிர் நெல்லும் கரும்பும்தான். அதைத் தொடர்ந்து பட்டத்திற்கு தகுந்தபடி வேர்க்கடலை, எள், மஞ்சள், மரவள்ளி என பல பயிர்களும் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயம் செய்வதற்கு போதிய தண்ணீர் இல்லாதவர்கள் பருத்தியை பயிரிடுவார்கள். இப்படி, எந்தப்பக்கம் திரும்பினாலும் வயலும் வெளியுமாகவே இருக்கும் இந்த ஊரில் ஒரே ஆச்சரியம் என்னவென்றால் கோவிந்தராஜின் விவசாயம்தான். ஆம், சுமார் 800 வீடுகளில் இருந்து பெரும்பான்மையானவர்கள் விவசாயம் செய்தபோதிலும், இந்த ஊரின் ஒரே இயற்கை விவசாயியாக இருப்பவர் கோவிந்தராஜ்தான். பாரம்பரிய நெல் ரகங்கள், வேர்க்கடலை, எள், மஞ்சள் என அனைத்தையும் இயற்கை முறையில் விளைவித்துவரும் இவர், தற்போது அவரது நிலத்தில் மரவள்ளி பயிரிட்டிருக்கிறார். இயற்கை விவசாயம் குறித்தும் இவரது சாகுபடி குறித்தும் தெரிந்துகொள்ள இவரைத் தொடர்பு கொண்டோம்.

எனக்குச் சொந்தமாக 10 ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில், இரண்டு ஏக்கரில் தக்கை பூண்டு விதைத்திருக்கிறேன். அடுத்த வாரம் அந்த தக்கைபூண்டை மடக்கி உழுது அதே நிலத்தில் கருப்புக் கவுனியும் மாப்பிள்ளை சம்பாவும் பயிரிடப்போகிறேன். அதுபோக 4 ஏக்கரில் மரவள்ளி பயிரிட்டிருக்கிறேன் என்றவர் மேலும் தொடர்ந்தார்.நானும் மற்ற விவசாயிகளைப் போலவே செயற்கை உரங்கள் பயன் படுத்தித்தான் விவசாயம் செய்து வந்தேன். இருந்தபோதும் அவற்றை குறைந்த அளவில்தான் பயன்படுத்துவேன். செயற்கை உரங்களை கை கொண்டு பயன்படுத்தியபோது கை மற்றும் கால்களில் தோல் சார்ந்த பிரச்னைகள் வரும். கூடவே சாகுபடி செய்யக்கூடிய விளை

பொருட்களின் சுவை இல்லாமல் இருக்கும். அரிசியும் கூட ஒரு வருடம் வைத்திருந்து சமைக்கும்போது சுவை, மணம் ஏதுமில்லாமல் இருக்கும். அதனால், ஒரு கட்டத்தில் செயற்கை சார்ந்த அனைத்தையும் விட்டுவிட்டு முழுமையாக இயற்கை விவசாயத்திற்கு மாறினேன். அதன்படி, 2008ல் இருந்து இப்போது வரை இயற்கை விவசாயம்தான்.

இயற்கை விவசாயத்தை தொடங்கும்போது அனைத்து விவசாயத்திலும் மகசூல் குறைவாகத்தான் கிடைத்தது. நான் மகசூலைப்பற்றி கவலைப்படாமல், அடி உரம், பூச்சி நீக்கி, பயிர் வளர்ச்சி என அனைத்திற்கும் இயற்கை உரங்களை பயன்படுத்தினேன். அதனால், எனது நிலம் இயற்கை விவசாயத்திற்கு நன்கு பழகிப்போனது. தற்போது எந்த இடுபொருட்களும் இல்லாமலே நல்ல விளைச்சல் தருகிறது. அந்த வகையில் மரவள்ளியிலும் கூட நல்ல மகசூல் எடுத்துவருகிறேன். தொடர்ந்து பல ஆண்டுகளாக பல்வேறு ரகங்களில் மரவள்ளி சாகுபடி செய்து வரும் நான் தற்போது கருப்பு தாய்லாந்து ரக மரவள்ளியை சாகுபடி செய்து வருகிறேன். இந்த ரக மரவள்ளியை பொருத்தவரை ஏக்கருக்கு 3000 விதைக் குச்சிகள் வரை தேவைப்படும். நான் தொடர்ந்து மரவள்ளி சாகுபடி செய்வதால் என்னிடம் எப்போதும் மரவள்ளி விதைக் குச்சிகள் கைவசம் இருக்கும். அந்த குச்சிகளை 3 அடிக்கு 1 என்ற விகிதத்தில் நட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் மரவள்ளிக் குச்சிகளை நடுவதற்கு முன்பு அடி உரமாக தொழு உரம் மற்றும் கோழிக்கழிவுகளை கொடுத்து வந்தேன். ஆனால், தற்போது அடி உரமாக ஏதும் கொடுப்பது கிடையாது. அந்தளவிற்கு, இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்தியதால் மண்ணில் நுண்ணுயிர்கள் அதிகமடைந்து விட்டன.

விதைக்குச்சிகள் நட்ட பிறகு அடுத்த மூன்றாம் நாள் முதல் தண்ணீர் கொடுக்க வேண்டும். 10வது நாள் குச்சிகள் முளைக்கத் தொடங்கிவிடும். இப்படி வளர்கிற மரவள்ளியானது வளர வளர வேர் பிடிக்க ஆரம்பித்துவிடும். 9 முதல் 10ம் மாதங்களில் அறுவடை செய்யத் தொடங்கலாம். இதற்கிடையில், களை வளர்வதைப் பொருத்து களை பறிக்க வேண்டும். செடி வளர வளர வேர் பெருத்துக் கொண்டே போகும். அதே சமயம், அதற்கு தேவையான தண்ணீரையுமே குறைத்துக் கொள்ளலாம். மரவள்ளி வளர்வதற்கும் பூச்சி தாக்காமல் இருப்பதற்கும் நான் தண்ணீர் பாய்ச்சும்போது கோமியம் மற்றும் ஜீவாமிர்தம் ஆகியவற்றை கலந்து விடுவேன். நல்ல முறையில் பராமரிப்பு செய்து வந்தாலே போதுமானது. ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 டன் வரை மரவள்ளி கிழங்கு அறுவடை செய்யலாம். சராசரியாக ஒரு ஏக்கருக்கு 13 டன் வரை அறுவடை எடுக்கலாம் என நம்பிக்கை பொங்க பேசுகிறார் கோவிந்தராஜ்.

தொடர்புக்கு:

கோவிந்தராஜ்: 94428 77374

உழவு, விதைப்பு, களைபறிப்பு, அறுவடை என ஒரு ஏக்கருக்கு எப்படிப் பார்த்தாலும் 20ல் இருந்து 30ஆயிரம் வரை செலவு ஆகும் எனக்கூறும் கோவிந்தராஜ், ஒரு டன் மரவள்ளி தற்போது 6 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது என்கிறார். அந்த வகையில், ஒரு ஏக்கருக்கு சராசரி 13 டன் வீதம் 78 ஆயிரம் வரை வருமானம் பார்க்கலாம் என உறுதி அளிக்கிறார்.

எங்கள் ஊர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்படுகிற மரவள்ளியானது சேலம், வேலூர் போன்ற பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளுக்கு ஜவ்வரிசி மற்றும் மாவு தயாரிக்க அனுப்பப் படுகிறது என்கிறார் கோவிந்தராஜ்.