Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிதாக தயாரிக்கப்படும் செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற்றது ஒன்றிய அரசு

டெல்லி: புதிதாக தயாரிக்கப்படும் செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு வாபஸ் பெற்றது. வாடிக்கையாளர்களின் தொலைந்து போன செல்போன்களைக் கண்டறியவும், 16 இலக்க ஐஎம்இஐ அடையாள எண்களில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்கவும் ஏற்கனவே ஒன்றிய அரசால் ‘சஞ்சார் சாத்தி’ ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய செல்போன்களிலும் 90 நாட்களுக்குள், அதாவது 2026 பிப்ரவரி மாதத்திற்குள் இந்தச் செயலியைத் தயாரிப்பு நிறுவனங்களே முன்கூட்டியே நிறுவியிருக்க வேண்டும் எனத் தொலைத்தொடர்புத் துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பயனர்கள் இந்தச் செயலியைத் தங்களது செல்போனிலிருந்து நீக்கவோ அல்லது முடக்கவோ முடியாத வகையில் வடிவமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி கட்டாயமாக்கப்படுவதால் குடிமக்களின் தனியுரிமை பறிக்கப்படுவதாகவும், மக்களை உளவு பார்ப்பதற்கான ஒன்றிய அரசின் திட்டம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன. இதனிடையே, ஒன்றிய அரசு சஞ்சார் சாத்தியின் அம்சங்கள் குறித்தும் விளக்கியுள்ளது. ஒன்றிய அரசு இத்தனை நன்மைகளைப் பட்டியலிட்டாலும் கூட இந்த செயலிக்கு எதிர்ப்பு பரவலாக இருந்து வந்தது.

இந்த நிலையில், சஞ்சாா் சாத்தி செயலியை செல்போன் தயாரிக்கும் போதே கட்டாயம் நிறுவ வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தொலைத்தொடா்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனைத்து குடிமக்களுக்கும் சைபர் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன், அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டது. இந்த செயலி பாதுகாப்பானது மற்றும் சைபர் உலகில் உள்ள மோசடியாளர்களிடம் இருந்து குடிமக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் பங்கேற்புடன் அனைத்து பயனர்களையும் பாதுகாப்பதோடு, சைபர் மோசடி பற்றிய புகார் அளிக்க உதவுகிறது.

எப்போது வேண்டுமானாலும் இந்த செயலியை நீக்கலாம் என்று அரசால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் மற்றும் ஒரு நாளைக்கு 2,000 மோசடி சம்பவங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 6 லட்சம் குடிமக்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்ய பதிவு செய்துள்ளனர். இதன் பயன்பாடு 10 மடங்கு அதிகரித்துள்ளது. சஞ்சார் சாத்தி செயலிக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், செல்போன் உற்பத்தியாளர்களுக்கு முன் நிறுவலை கட்டாயமாக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.