Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சனாதன சக்திகளின் பிரித்தாளும் சூழ்ச்சி குறித்து விழிப்புணர்வு டிச.2 முதல் வைகோ சமத்துவ நடைபயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் துவக்கி வைக்கிறார்

சங்கரன்கோவில்: சனாதன சக்திகளின் பிரித்தாளும் சூழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மதிமுக மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணத்தை வரும் டிச. 2ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் துவக்கி வைக்க உள்ளதாக வைகோ தெரிவித்தார். மதிமுக சமத்துவ நடைபயணத்திற்கு வீரர்கள் தேர்வு, அக்கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவின் சொந்த கிராமமான தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா, கலிங்கப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது.

இதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து திரளாகப் பங்கேற்ற தொண்டர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை நிரப்பிக் கொடுத்தனர். இதையடுத்து அவர்களை தொண்டரணி, இளைஞரணி, மாணவரணி என 3 வகையாக பிரித்து நேர்காணல் நடத்தி தேர்வு செய்த வைகோ, நடைபயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார்.

இதைத்தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘வைதீக, சனாதன சக்திகளின் பிரித்தாளும் சூழ்ச்சி குறித்தும், போதை பொருட்கள் தடுப்பு குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமத்துவ நடைபயணத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், வரும் டிச. 2ம் தேதி திருச்சி உழவர் சந்தையில் இருந்து துவங்கி வைக்க உள்ளார்.

துவக்க விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்களான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதையடுத்து மணப்பாறையில் கம்யூனிஸ்ட் கட்சியினரும், கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். மதுரையில் டிச. 12ம் தேதி நடைபெறும் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்’’ என்றார்.