இந்தியாவில் சட்ட அங்கீகாரம் இல்லாத நிலையில் ஓரினச்சேர்க்கை தம்பதிக்கு பாராட்டு விழா நடத்திய திரிணாமுல்: ‘வங்கத்தின் பெருமை’ என்று எம்பி அபிஷேக் புகழாரம்
கொல்கத்தா: இந்தியாவில் அரசியல் கட்சி ஒன்று முதல் முறையாக மேற்குவங்கத்தில் திருமணம் செய்து கொண்ட ஓரினச்சேர்க்கை தம்பதிக்கு பொதுவெளியில் பாராட்டு விழா நடத்திய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாத நிலையில், மேற்குவங்கத்தின் சுந்தரவனக் காடுகளை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்த ஒரே பாலின ஜோடியான ரியா சர்தார் மற்றும் ராக்கி நஸ்கர், சமீபத்தில் உள்ளூர் கோயில் ஒன்றில் கிராம மக்கள் ஆதரவுடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அழைத்து பாராட்டு விழா நடத்தியது. அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி, நேற்று நடந்த பாராட்டு விழாவின் போது தொலைபேசி வாயிலாக தம்பதியிடம் பேசி, அவர்களை ‘வங்கத்தின் பெருமை’ என புகழ்ந்துள்ளார்.
இந்தியாவில் அரசியல் கட்சி ஒன்று, ஓரினச்சேர்க்கை திருமணத்தை பொதுவெளியில் கொண்டாடுவது இதுவே முதல் முறை என்பதால், இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒலிபெருக்கி மூலம் ஒளிபரப்பப்பட்ட அந்த உரையாடலில் அபிஷேக் பானர்ஜி, ‘சுந்தரவன மண்ணில் இருந்து தனித்துவமான வரலாறு படைக்கப்பட்டுள்ளது. சமூக நெறிகளை மீறிய ரியா மற்றும் ராக்கியின் தைரியம், வரும் தலைமுறைகளுக்கு ஓர் உதாரணமாக இருக்கும். அன்பே மனிதம், மனிதம் மட்டுமே அடையாளம் என்பதை அவர்கள் காட்டியுள்ளனர்’ என்று குறிப்பிட்டார். தொழில்முறை நடனக் கலைஞர்களான இந்த ஜோடி, கடந்த 4ம் தேதி கோயிலில் திருமணம் செய்தபோது, நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கலந்துகொண்டு ஆசி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் குடும்பத்தினரிடம் இருந்து சில எதிர்ப்புகளை சந்தித்த இத்தம்பதி, கிராம மக்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து ராக்கி கூறுகையில், ‘கடந்த ஏழு மாதங்களாக இருந்த மன அழுத்தம், இன்றைய பாராட்டுக்குப் பிறகு இறுதியாக குறைந்துள்ளது’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாட்டை அக்கட்சியின் மற்ற தலைவர்களும், எம்.பி மஹுவா மொய்த்ராவும் சமூக ஊடகங்களில் பாராட்டியுள்ளனர். மேற்குவங்கத்தில் திருமணம் செய்து கொண்ட ஓரினச்சேர்க்கை தம்பதிக்கு பொதுவெளியில் பாராட்டு விழா நடத்திய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு எதிரான மனு தள்ளுபடி
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் அரசு அதிகாரியான கிம் டேவிஸ், தனது அப்போஸ்தலிக் கிறிஸ்தவ மத நம்பிக்கைகளைக் காரணம் காட்டி, ஓரினச்சேர்க்கை தம்பதியருக்கு திருமண உரிமம் வழங்க மறுத்து கடந்த 2015ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரால் பாதிக்கப்பட்ட இரண்டு தம்பதியருக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் டாலர்களுக்கு மேல் இழப்பீடு வழங்கும்படி கீழ் நீதிமன்றங்கள் அவருக்கு உத்தரவிட்டன. இந்த பின்னணியில், நாடு தழுவிய அளவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய ‘ஓபர்கெஃபெல் எதிர் ஹாட்ஜஸ்’ என்ற வழக்கில் 2015ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்து ரத்து செய்யக்கோரி கிம் டேவிஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று எவ்வித கருத்துகளையும் தெரிவிக்காமல் தள்ளுபடி செய்தது.
மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க குறைந்தது நான்கு நீதிபதிகளாவது ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நிலையில், போதிய ஆதரவு இல்லாததால் இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தற்போதைய இந்த முடிவு, ஓரினச்சேர்க்கை தம்பதியருக்கு சமமான கண்ணியத்தையும், திருமணம் செய்துகொள்வதற்கான அடிப்படை உரிமையையும் அரசியலமைப்பு உறுதி செய்கிறது என்ற 2015ம் ஆண்டின் தீர்ப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
